“கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், அண்ணா பிறந்தநாளையொட்டி நல்லெண்ண அடிப்படையில் 700 ஆயுள் கைதிகள் சிறையிலிருந்து முன் விடுதலை செய்யப்படுவார்கள்” என்றும், சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

தமிழக சட்டசபையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்த பிறகு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்” என்று, அறிவித்தார்.

“தகுதியின் அடிப்படையில் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், உண்மையான ஏழை - எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகைக் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும்” என்றும், முதலமைச்சர் விளக்கமும் அளித்தார். 

“கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்கள் குறித்து 51 விதமான தகவல்கள் திரட்டப்பட்டு உள்ளன என்றும், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்கள் கடந்த ஒரு மாத காலமாகச் சேகரிக்கப்பட்டது” என்றும், அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், “கூட்டுறவு சங்கம் சார்பாக யாருக்கெல்லாம் கடன் தள்ளுபடி என்ற விவரம் விரைவில் வெளியிடப்படும்” என்றும், முதலமைச்சர் அறிவித்தார்.

 “இதன் மூலமாக, 6000 கோடி ரூபாய் அளவிற்கான நகை கடன் தள்ளுபடியை” முதலமைச்சர் ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார்.

மேலும், “இந்த அறிவிப்பு 2021 மார்ச் 31 ஆம் தேதி வரை அடகு வைத்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஒரே குடும்பத்தில் அதிகமானோர் அடகு வைத்திருந்தால் அவை களையப்படும்” என்றும், முதலமைச்சர் கூறினார்.

அதே போல், “செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் தண்டனை சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

அதே போல், “தமிழ்நாட்டில் 10 புதிய காவல் நிலையம், 4 தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.