புதிய சிக்கல்.. மசினகுடி புலி இருக்குமிடம் தெரிந்தது! ஒரே இடத்தில் 4 புலிகள் சுற்றுவதால் குழப்பம்..

முதுமலை ஒட்டியுள்ள மசினகுடி பகுதியில் முகாமிட்டுள்ள புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவிடப்பட்ட நிலையில், அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் உள்ள மசினகுடி வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தினரைச் சேர்ந்த 4 பேரை, வனத்திலிருந்து வெளியே வந்த புலி ஒன்று தாக்கி கொன்று உள்ளது.

மனிதர்கள் தவிர, அப்பகுதியில் 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் அந்த புலி கொன்றது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பகுதி கிராம மக்கள், ஆட்கொல்லி புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க பலகட்ட போராட்டங்களை நடத்தினர்.

இதனையடுத்து, பொதுமக்களின் வேண்டுகோளுக்கு ஏற்று புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்து, 3 வன கால்நடை மருத்துவ குழு மற்றும் 100 க்கும் மேற்பட்ட வனத்துறையினர், புலியை தேடும் பணியில் கடந்த ஒரு வார காலமாக ஈடுபட்டு வந்தனர். 

இப்படியாக, கடந்த 7 நாட்களாக ஆட்கொல்லி புலியானது, வனத்துறையினருக்குப் பல முறை தென்பட்ட போதிலும் அடர்ந்த புதர்களில் மறைந்து கொண்டு வனத்துறையினருக்குக் கடுமையாகப் போக்கு காட்டி வந்தது.

இதனையடுத்து, நேற்று இந்த ஆட்கொல்லி புலியானது, அங்குள்ள தேவன் எஸ்டேட் பகுதியிலிருந்து மசினகுடி பகுதிக்கு நகர்ந்ததாக வனத்துறையினர்க்குத்  தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இது குறித்து, உடனடியாக மசினகுடி பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டனர். இந்நிலையில் ஆட்கொலி புலி மசினகுடி அருகே உள்ள சிங்காரா வனப்பகுதியில்  கால்நடை  மேய்த்துக்கொண்டிருந்த மங்கள பசுவன் என்பவரை அடித்து கொன்றது. 

இதனை தொடர்ந்து புலியை சுட்டு பிடிக்க கோரி பொதுமக்கள் மசினகுடி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், வேறு வழியில்லாமல் புலியை சுட்டு பிடிக்க அதிரடியாக உத்தரவு பிறக்கப்பட்டது.

இதனால்,  புலி இருக்குமிடம் தற்போது தெரிய வந்துள்ளது. புலி இருக்கும் இடத்தை சுற்றி வளைத்து சுட்டுக் கொல்ல வனத்துறை மற்றும் அதிரடிப்படையினர் தயாராகி வருகின்றனர். 

புலியை சுட்டுக்கொல்ல வனத்துறையினர் 20 பேர், 5 குழுக்களாகப் பிரிந்து தேடுதல் வேட்டையை இன்னும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

நீலகிரி வனத்துறை, கேரள வனத்துறை, அதிரடிப்படையினர் என 100 க்கும் மேற்பட்டோர் இந்த தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், புலியை பிடிப்பதற்கே முழு முயற்சி மேற்கொள்ளப்படும் என வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. புலியை பிடிப்பதற்கான முயற்சி தோல்வியடைந்தால் மட்டுமே, சுட்டுக் கொல்லப்படும்” என்றும், வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.

அதே போல், 6 பேர் கொண்ட 3 வன குழுவினர் வனப்பகுதிக்குள் சென்று உள்ளனர். புலியை சுட்டு பிடிக்கும் வரை பொது மக்கள் வன பகுதிக்குள் ஆடு மாடுகள் மேய்க்க செல்ல வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இந்த புலியை தேடும் பணியில் முதன் முறையாக அதவை என்னும் மோப்பநாய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணியில் நீலகிரி வனத்துறை, கேரள வனத்துறை, அதிரடிப்படையினர் என 100 க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆட்கொல்லி புலியின் நடமாட்டம் உள்ள அதே இடத்தில் வேறு 4 புலிகளின் நடமாட்டம் உள்ளதால், வனத்துறையினர் தற்போது குழப்பம் அடைந்து உள்ளனர். 

இதனால், “குறிப்பிட்ட அந்த ஒரு புலியை தவிர, மாற்று புலியை சுடக் கூடாது” என்று, அவர்களுக்கு உயர் அதிகாரிகள் அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளனர். 

இதன் காரணமாக, ஆட்கொல்லி புலியின் புகைப்படத்தைக் காண்பித்து அதன் அடையாளங்களை வைத்து சரியான புலியை சுட அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

முக்கியமாக, புலியை சுடுவதற்காக 305, 315, AK 47 என மூன்று ரக துப்பாக்கிகளை அதிரடிப் படையினர் பயன்படுத்துகின்றனர். 
அதே போல், பாதுகாப்பு கருதி மசினகுடி தெப்பாகாடு செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, புலியின் நடமாட்டத்தை ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு தொற்றிக்கொண்டு உள்ளது.