சமீப காலமாகத் தமிழகம் முழுவதும் இந்தி மொழி, புகுத்தப்பட்டு வருவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரயில்வே துறை உள்ளிட்ட மத்திய அரசு அரசின் பல்வேறு துரையில் இந்தி மொழியில் வாசகங்கள் இடம் பெற்று வந்தன. அதன் தொடர்ச்சியாக நெடுஞ்சாலையின் ஓரம் தமிழகத்தின் பல இடங்களில் இந்தி மொழியில் வாசகங்கள் இடம் பெற்றன.

இதை மெய்ப்பிக்கும் வகையில், கடந்த மாத தொடக்கத்தில் தி.மு.க. மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றபோது, அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஐ.எஸ்.எப். பெண் அதிகாரி ஒருவர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழியிடம் இந்தியில் பேசியிருக்கிறார்

அதற்கு, திமுக எம்.பி. கனிமொழி, “நீங்கள் பேசும் இந்தி எனக்குப் புரியவில்லை. ஆங்கிலத்தில் அல்லது தமிழில் பேசுங்கள்” என்று, ஆங்கிலத்தில் பதில் அளித்திருக்கிறார்.  ஆனால், இதனைப் பற்றி கண்டுகொள்ளாத அந்த பாதுகாப்பு அதிகாரி, “நீங்கள் இந்தியரா? இந்தி தெரியவில்லையே?” என்று கனிமொழியிடம் கேட்டதாக தெரிகிறது. 

இதனால், கோபமடைந்த திமுக எம்.பி. கனிமொழி, அந்த அதிகாரியிடம் கோபமாகவே பதில் அளித்து விட்டு டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றதாக சொல்லப்படுகிறது. பின்னர், இந்த சம்பவம் தொடர்பாகக் கனிமொழி எம்.பி. தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்த விவகாரம் அப்போதே பூதாகாரமானது.

இதை தொடர்ந்து, கடந்த வாரம், ஆனந்த விகடன் இதழில், இந்தி தெரியாததால் டெல்லி விமான நிலையத்தில் தான் அவமானப்படுத்தப்பட்டதாக இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார். அவருடைய பிறந்தநாளையொட்டி வெளியாகியிருந்த அந்தப் பேட்டிதான், தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. தன்னுடைய பேட்டியில், கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கனடா மான்ட்ரியல் திரைப்பட விழாவில் ஆடுகளம் படத்தை ஸ்கிரீன் செய்துவிட்டு இந்தியாவுக்கு திரும்பி வந்தபோது தான அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் நடந்ததாக அவர் கூறியிருந்தார். 

இந்தி தெரியாத காரணத்தால் விமான நிலையத்தில் வெற்றிமாறன் அவமதிக்கப்பட்டது குறித்து அறிந்து, அவரின் ரசிகர்கள் மட்டுமன்றி இந்தி திணிப்புக்கு எதிரானவர்கள் பலருமும்கூட அதிருப்தியும், கோபமும் அடைந்தனர். தொடர்ந்து அவர்கள், ``இந்தி எப்படி இந்த நாட்டின் தாய் மொழியாகும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, #ஹிந்திதெரியாதுபோடா என்ற ஹேஷ்டேக்கை இன்று காலை முதலே டிரெண்டாக்கி வருகின்றனர். 

இந்திய அளவில் டிரெண்டாகி வரும் இந்த ஹேஷ்டேக்கில், பலரும் தங்கள் கருத்தையும், விமர்சனங்களையும் முன்வைத்தவண்ணம் உள்ளனர். மீம்ஸ்களையும், தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துவருகின்றனர். 

திரை உலகில் பலர் இந்திக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் சாந்தனு ஆகியோர் இந்த டிரெண்டில் இறங்கி உள்ளனர். 

யுவன் சங்கர் ராஜா, டி- சர்ட் ஒன்றை அணிந்துள்ளார். அதில் திருவள்ளுவர் படத்துடன், நான் தமிழ் பேசும் இந்தியன் என்று அச்சிடப்பட்டிருந்தது. யுவனுடன் நடிகர் ஸ்ரீரீஷ் இருக்கிறார். இவர் சிவப்பு நிற டீ சர்ட் அணிந்துள்ளார். இதில் இந்தி தெரியாது போடா என்று எழுதப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து நடிகர் சாந்தனுவும் அவரின் மனைவியும் இதே ஜோடி டி- சர்ட்களை அணிந்து புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹிந்திதெரியாதுபோடா என்ற ஹேஸ்டேக்கை தேசிய அளவில் நெட்டிசன்கள் டிரெண்டிங் ஆக்கி வரும் நிலையில், இதற்கு பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்வினையாற்றி வருகின்றனர். உதாரணத்துக்கு, நடிகர் எஸ்.வி.சேகர், ``டிசர்ட் விற்பனையாக, வியாபார யுக்தி" என்று கூறி, சாந்தனுவின் படத்தை பகிர்ந்திருக்கிறார்.