அக்டோபரில் நடக்கவிருக்கும் மாபெரும் சோதனை - ஹேக்கர்கள் மூலம் திருடப்படுகிறதா தடுப்பூசி விவரங்கள்?

அக்டோபரில் நடக்கவிருக்கும் மாபெரும் சோதனை - ஹேக்கர்கள் மூலம் திருடப்படுகிறதா தடுப்பூசி விவரங்கள்? - Daily news

கொரோனா தடுப்பூசியின் உலகளாவிய தேவை மிக அதிகமானது. எந்தவொரு தடுப்பூசியும் அல்லது நிறுவனமும் மட்டுமே, உலகளாவிய தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்று சனோஃபி பாஸ்டரின் நிர்வாக துணைத் தலைவர் தாமஸ் ட்ரையம்பே கூறியுள்ளார்.

உலகளைவில் 120 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தடுப்பூசி கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வாளர்கள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்தின் அடுத்த கட்ட பரிசோதனையை துவங்க உள்ளனர்.

மருந்து நிறுவனங்களான கிளாசோஸ்மித்க்லைன் (GlaxoSmithKline) மற்றும் சனோஃபி பாஷ்டெர் (Sanofi Pasteur) ஆகியவை 100 மில்லியன் கொரோனா தடுப்பூசி டோஸ்களை அமெரிக்காவிற்கு வழங்குவதாக அறிவித்துள்ளன.

மருத்துவ பரிசோதனைகள், உற்பத்தி, தடுப்பூசி வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்காக அமெரிக்கா 2.1 பில்லியன் அமெரிக்க டாலர் வரை வழங்க உள்ளது என்று இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதில், சனோஃபி அதிக நிதியை பெறும்.

அமெரிக்க அரசு, தனது ஆபரேஷன் வார்ப் ஸ்பீட் திட்டத்தின் ஒரு பகுதியாக கூடுதலாக 500 மில்லியன் டோஸ் நீண்ட காலத்திற்கு வழங்க கூடுதல் வழி உள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் குறைந்தபட்சம் ஒரு பாதுகாப்பான, பயனுள்ள தடுப்பூசியை அமெரிக்கா வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஆபரேஷன் வார்ப் ஸ்பீட் என்ற கொள்கையை அந்த நாட்டு அரசு அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக, இந்த தடுப்பூசிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது, என்று அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை செயலாளர் அலெக்ஸ் அசார் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த வார தொடக்கத்தில் பிரிட்டிஷ் அரசு 60 மில்லியன் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது அடுத்த ஆண்டின் முதல் பாதியில் வெளியாக கூடும். 10 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திடம் பிரிட்டன் ஆர்டர் கொடுத்துள்ளது. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் பிரிட்டன் மக்களுக்கு தடுப்பூசி பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த 20 க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் தற்போது முன்னேறிய பரிசோதனை அளவில் உள்ளன. அமெரிக்காவின் மாடெர்னா நிறுவன தடுப்பூசியும், பயான்டெக்-பைசர் தடுப்பூசியும் தலா 30 ஆயிரம் பேர்களிடம் பரிசோதிக்கப்படுகிறது. சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசியும் ஆய்வில் உள்ளது.

இந்நிலையில் லண்டன் இம்பீரியல் கல்லூரிகள் ஆய்வாளர்கள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி முதற்கட்டத்தில் குறைந்த அளவிலான எண்ணிக்கையில் மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட்டது. முதற்கட்ட சோதனையில் பக்கவிளைவுகள் ஏதும் யாருக்கும் ஏற்படாததால் அது பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து கல்லூரி பேராசிரியர் டாக்டர் ரோபின் ஷட்டாக் பேசியதாவது, 'அடுத்த கட்டமாக 300 பேரிடம் இத்தடுப்பூசி மருந்து பரிசோதிக்கப்பட உள்ளது. பரிசோதனையில் 75 வயதுக்கு மேற்பட்டவர்களும் இடம் பெறுவார்கள். அதற்கும் அடுத்த கட்டமாக அக்டோபர் மாதத்தில் ஆயிரக்கணக்கானவர்களிடம் பரிசோதனை நடத்தப்படும்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் தடுப்பூசி விவரங்களை ரஷ்ய ஹேக்கர்கள் திருட முயன்றதாக தகவல்கள் வெளியாகின.   ஆனால் ரஷ்யா இதை மறுத்தது. நேற்று கொரோனா தடுப்பூசி கண்டு பிடித்து வரும் அமெரிக்காவின் மாடர்னா மருந்து நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி ஆய்வுகளின் விவரங்களை சீனர்கள் திருட முயன்றதாக குற்றச்சாட்டு கிளம்பி உள்ளது.

கடந்த வாரம்  சீன அரசாங்கத்தின் உளவுத் துறையின் ஹேக்கர்கள் அமெரிக்காவின் பல வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியாரின் கணினி அமைப்புக்களை ஹேக் செய்து அதில் உள்ள தகவல்களைத் திருடுவதாக எஃப் பி ஐ துணை இயக்குநர் டேவிட் போடிச் தெரிவித்திருந்தார். மேலும் அவர் சீன ஹேக்கர்கள் அமெரிக்காவை மட்டுமின்றி பல உலக நாடுகளிலும் இது போல நடவடிக்கையில் ஈடுபடுவதாகக் கூறினார்
 
இருப்பினும் சீன அரசு இதை மறுத்துள்ளது

Leave a Comment