வரதட்சணை பேராசையால், 25 வயது பெண்ணுக்கு 18 வயது கூட பூர்த்தியாகாத தனது மகனை, தந்தையே திருமணம் செய்ய வைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் அரியூரை சேர்ந்த 25 வயதான இளம் பெண் ஒருவர் திருமணம் ஆன நிலையில், தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவகாரத்து பெற்று தனது தாய் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

Father tries to wed older girl to son for dowry

இதனிடையே, அந்த பகுதியில் பெரும் செல்வந்தரான, அந்த பெண்ணின் தந்தை, தனது மகளுக்கு இதைவிட நல்ல மாப்பிள்ளைப் பார்த்து தனது மகளுக்குத் திருமணம் செய்துவைப்பதாக, மகளின் முன்னாள் கணவரின் வீட்டாரிடம் சவால் விட்டு வந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, தனது மகளை முதல் தாரமாகத் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு விலை உயர்ந்த கார், இருசக்கர வாகனம் மற்றும் பல லட்சம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவை தருவதாகத் தனது நண்பர்கள் வட்டத்தில் கூறி, அதற்குத் தகுந்தார்போல் நல்ல மாப்பிள்ளை பார்க்க சொல்லியிருக்கிறார்.

இதில், வரதட்சணைக்கு பேராசைப்பட்டு, அவருடைய நண்பர் ஒருவரே, கல்லூரில் படித்து வரும் தனது 18 வயது மகனை, அந்த 25 வயது பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்க முன்வந்துள்ளார். ஆனால், இதற்கு இந்த இளைஞரின் தாயார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

எனினும், யாருக்கும் தெரியாமல், தனது மகனை அந்த பெண்ணுக்கு நிச்சயம் செய்த நிலையில், வரும் 12 ஆம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். இதனால், திருமணத்திற்கு கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் வாங்குவது தொடர்பான பணிகள் நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில், இந்த தகவல் இளைஞரின் தாயாருக்குத் தெரியவந்ததால், கடும் அதிர்ச்சியடைந்த அவர், மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, அந்த இளைஞரின் வீட்டிற்குச் சென்ற சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது, அந்த இளைஞருக்கு 18 வயது கூட இன்னும் பூர்த்தியாகவில்லை என்று தெரியவந்தது.

மேலும், ஆணின் திருமண வயது 21 என்றும், இதனால் அதன் பிறகே, அந்த இளைஞருக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்றும்,  அந்த இளைஞரின் தந்தைக்கு, அதிகாரிகள் அறிவுரை கூறியுள்ளனர்.

அத்துடன், வரும் 12 ஆம் தேதி நடைபெற இருந்த திருமணத்தையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதுபோல் இனி செயல்படக் கூடாது என்றும் அந்த இளைஞரின் தந்தையை அதிகாரிகள் எச்சரித்துவிட்டுச் சென்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.