“திட்டமிட்டு அதிமுகவினர் இல்லங்களில் ரெய்டு நடத்தப்படுகிறது என்றும், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகவும்” ஆளுநரிடம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி புகார் அளித்து உள்ளார்.

தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார்.

பின்னர், தமிழ்நாட்டின் 15 வது ஆளுநராக ஆர்.என். ரவி செப்டம்பர் 18 ஆம் தேதி அன்று பதவியேற்றுக்கொண்டார். 

அதனைத்தொடர்ந்து, அவர் செப்டம்பர் 21 ஆம் தேதி டிஜிபி சைலேந்திரபாபுவை வரவழைத்து, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் உள்ளிட்ட விவரங்களை முழுமையாக கேட்டறிந்தார்.

இதையடுத்து, கடந்த 13 ஆம் தேதி “நீட் தேர்வில் தமிழகம் விலக்கு பெறுவது” தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநரை சந்தித்திது பேச்சு வார்த்தை நடத்தியிருந்தார். 

இந்த சூழலில்தான், அதிமுகவின் 50 ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்திற்கு மத்தியில் அதிமுக பிரமுகர்கள் வீடுகளில் ரெய்டு, தேர்தலில் தோல்வி, சசிகலா வருகை என பல்வேறு பிரச்னைகள் அதிமுகவில் எழுந்து உள்ளது. 

திமுக திட்டமிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்த ஏவி விடுவதாக எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். 

இந்த நிலையில் தான், சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் மனு ஒன்றையும் அளித்தார்.

இப்படியாக, ஆளுநருடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் விதி மீறல் நடந்தது என்றும், அது குறித்து விசாரிக்க ஆளுநரிடம் மனு அளித்து உள்ளோம்” என்றும், குறிப்பிட்டார். 

“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெற ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், அவர் மனுவில் வலியுறுத்தி இருந்தார். 

அத்துடன், “ முன்னாள் அமைச்சர்களின் இல்லங்களில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை திட்டமிட்டு செய்யப்படுகிறது என்றும், அதிமுகவினரின் புகார்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை” என்றும், அவர் குற்றம்சாட்டினார்.

“அதிமுக வேட்பாளர்களின் வெற்றியை தாமதமாக அறிவித்தனர் என்றும், ஆனால் திமுகவினர் வெற்றியை உடனுக்குடன் அறிவித்தனர்” என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார். 

“நீதிமன்ற உத்தரவை மாநில தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை என்றும், உண்மையான அதிமுக என்று தேர்தல் ஆணையம் எங்களைத் தான் சொல்லி உள்ளது” என்றும், அவர் குறிப்பிட்டு பேசினார். 

அதே போல், “சசிகலா குறித்து” பேசிய அவர், “சசிகலா அதிமுகவில் இல்லை என்றும், கட்சியில் இல்லாதவரை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை எங்களுக்கு இல்லை” என்றும், திட்டவட்டமாக அவர் தெரிவித்தார்.