டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு தூக்கு தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையைச் சேர்ந்த டாக்டர் சுப்பையா, நரம்பியல் சிகிச்சையில் மிகச் சிறந்த மருத்துவராக பணியாற்றி வந்தார். அத்துடன், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்த சூழலில் தான், அவர் கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ராஜா அண்ணாமலைபுரத்தில் கூலிப்படையினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, தீவிரமான விசாரணையில் இறங்கினார். அப்போது, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

அதாவது, டாக்டர் சுப்பையாவின் தாய் மாமனுக்கு சொந்தமான இரண்டே கால் ஏக்கர் நிலத்தை, உரிமை கொண்டாடுவதில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குள் பிரச்சினை எழுந்துள்ளது. இந்த சொத்து பிரச்சனையானது கடந்த 3 தலைமுறைகளாகத் தீர்க்கவே முடியாமல் நீடித்து வந்திருக்கிறது.

இந்த சொத்து பிரச்சனையில் தான், டாக்டர் சுப்பையா கொடூரமான முறையில் கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டார் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை, சென்னை முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

அதன் படி, இந்த வழக்கில் அரசு தரப்பில் 57 சாட்சிகளை விசாரணை செய்து, கிட்டதட்ட 173 ஆவணங்கள், 42 சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அத்துடன், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 3 சாட்சிகளை விசாரித்து, 7 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டதாகவும், கைதான 10 பேரில், ஐயப்பன் என்பவர் அப்ரூவர் ஆனதால், அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், ஆகஸ்டு 2 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் நீதிமன்றம் ஏற்கனவே கூறியிருந்தது. 

ஆனால், அன்றைய தினம் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரில் ஆசிரியர் பொன்னுசாமி, அவரது மனைவி மேரி புஷ்பம் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வரவில்லை. அப்போது, அவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “உடல் நிலை சரியில்லாத காரணத்தால், அவர்கள் இருவரும் வரவில்லை” என்று, கூறினார்.

நீதிமன்றத்தில், பொதுவாக “குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ஆஜராகும் பட்சத்தில் மட்டுமே தீர்ப்பு கூறுவது வழக்கமாக” இருந்து வருகிறது. 

இந்த வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பொன்னுசாமி, அவரது மனைவி மேரி புஷ்பம் ஆகியோர் அன்றைய தினம் ஆஜராகாத நிலையில், அன்றைய தினத்தில் தீர்ப்பை தள்ளிவைப்பதாக நீதிபதி அல்லி அறிவித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான கூலிப்படையைச் சேர்ந்த ஐயப்பன் தவிர குற்றம் சாட்டப்பட்ட மற்ற 9 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி அல்லி அதிரடியாகத் தீர்ப்பளித்தார்.

அத்துடன், குற்றஞ்சாற்றபட்ட பொன்னுசாமி, வழக்கறிஞர் பாசில், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் போரிஸ், முருகன், செல்வ பிரகாஷ் ஆகிய 7 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்படுவதாக” நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மேரி புஷ்பம், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படுவதாகவும்” நீதிபதி உத்தரவிட்டார்.

இதனால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பொன்னுசாமி, அவரின் மகன்கள் பாசில், போரிஸ் ஆகியோருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த வழக்கில், “நீதிமன்றம் அளித்த தீர்ப்பு திருப்திகரமாக உள்ளது என்றும், நீதிமன்றத்துக்கும், அரசுக்கும் நன்றி” என்றும், சுப்பையாவின் மனைவி கருத்து தெரிவித்து உள்ளார்.

இதனிடையே, தமிழகத்தில் நீண்ட காலமாக நடந்த வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனையும், 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது, வரலாற்றில் பதிய வைக்கும் தீர்ப்பாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.