இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலை மத்திய அரசு பேரிடராக அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் அதி தீவிரமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் வேகமாகப் பரவத் தொடங்கி உள்ளது.

coronavirus update in indian govt decision

இதனால், இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு வங்காளம், கோவா மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

coronavirus update in indian govt decision

அதேபோல், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹிமாச்சல் பிரதேசத்தில் வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள் மூடப்படி, அந்த மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் எதிரொலியாக, ஸ்ரீஹரிகோட்டாவில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

மேலும், கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

சீனா, இத்தாலி, அமெரிக்காவைப் போன்று இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதை அடுத்து, இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலை மத்திய அரசு, பேரிடராக தற்போது அறிவித்துள்ளது.

இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு, இழப்பீடாக தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

coronavirus update in indian govt decision

கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருபவர்களின் மருத்துவச் செலவை, அந்தந்த மாநில அரசே ஏற்க வேண்டும் என்றும், மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

அதேபோல், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, நிதியுதவி பெறும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலைப் பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளதால், பொதுமக்களிடையே ஒருவித பதற்றமும், பீதியும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, "கொரேனாவுக்கு எதிராக உறுதியுடன் போராடுவோம். விழிப்புணர்வுடன் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும். வருமுன் காப்போம் என்பதை நினைவுகூர்ந்து உடல்நலனைப் பாதுகாக்க வேண்டும்" என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வலியுறுத்தி உள்ளார்.