பாராளுமன்ற கூட்டத்தொடர் குறித்து நாளை மறுநாள் காணொலி மூலம் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்

பாராளுமன்ற கூட்டத்தொடர் குறித்து நாளை மறுநாள் காணொலி மூலம் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் - Daily news

பாராளுமன்ற மழைகால கூட்டத்தொடர் வருகிற 14-ந்தேதி தொடங்கி அக்டோபர் 1-ந்தேதி வரை நடைபெறுகிறது. சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும் விடுமுறை இல்லாமல் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலம் என்பதால் எம்.பி.க்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாராளுமன்ற இரு அவைகளையும் தலா 4 மணி நேரம் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எம்.பி.க்கள் இருக்கைகளுக்கு இடையே இடைவெளி உள்பட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளன.

இரு அவைகளும் காலை, மாலை தனித்தனியாக நடத்தப்படுகிறது. மேல்சபை காலையிலும், மக்களவை மாலை நேரத்திலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின் போது, கேள்வி நேரம் முழுமையாக ரத்து செய்யப்படும். தனிநபர் மசோதா தாக்கல் செய்வதற்கு அனுமதி இல்லை என்று பாராளுமன்ற மக்களவை, மேல்சபை செயலகங்கள் தெரிவித்து இருந்தன.

கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டதற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இது ஜனநாயக படுகொலை என்ற பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, கேள்வி நேரம் ரத்து செய்யும் முடிவு கைவிடப்பட்டுள்ளது. கேள்வி நேரம் இடம் பெற உள்ளது. என்றாலும் அது 30 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பாராளுமன்ற இரு அவைகளிலும், முதல் 30 நிமிடங்கள் கேள்வி நேரத்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய மந்திரிகள் எழுத்துப்பூர்வமாக பதில் அளிப்பார்கள்.

என்றாலும், துணைக் கேள்விகள் எழுப்ப அனுமதிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் கண்டத்தை தொடர்ந்து, இந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தை அனுமதிக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.

இந்நிலையில், முதல்முறையாக, மக்களவையும், மாநிலங்களையும் இரு வெவ்வேறு ஷிப்ட்களில் நடக்கிறது. அதன்படி, கொரோனா கால கட்டுப்பாடுகளை பின்பற்றி இரு அவைகளும் நடத்தப்பட உள்ளன. இதற்காக சமூக இடைவெளியுடன் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. 

அதேபோல பாராளுமன்ற கூட்டத்தொடர் குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம், நாளை மறுநாள் (செப்டம்பர் 8) காணொலி  வாயிலாக நடைபெற உள்ளது. கட்சியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
 
பாராளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட உள்ளது.

Leave a Comment