15 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்ததாக நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்துள்ள கோட்டார் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தன் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர், அந்த ஊர் முழுவதும் சிறுமியைத் தேடிப் பார்த்துள்ளனர். எங்குத் தேடியும் அந்த சிறுமி கிடைக்காத நிலையில், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், மாயமான சிறுமியின் சக தோழிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, மாயமான அந்த சிறுமி, காதலன் ஒருவனுடன் வீட்டை விட்டு வெளியேறியது தெரிய வந்தது.

இதனையடுத்து, அந்த காதலனின் செல்போன் எண்ணை வைத்து, அவரை கண்டுபிடித்த போலீசார், அந்த சிறுமியை மீட்டுள்ளனர். 

இதனையடுத்து, மீட்கப்பட்ட சிறுமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் அனுமதித்தனர். அங்கு, சிறுமியிடம் விசாரிக்கப்பட்ட நிலையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிறுமியிடம் நடத்திய விசாரணையில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் உட்பட மேலும் சிலர் என்னை பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்த டார்ச்சர் செய்தனர்” என்று, அந்த சிறுமி கூறி உள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், சிறுமியிடம் மேலும் விசாரித்துள்ளனர்.

அப்போது, “கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக, இந்த பாலியல் தொல்லையை அவர்களால் நான் அனுபவித்து வருகிறேன்” என்றும், அவர் கூறி இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

மேலும், “அவர்களின் மிரட்டலுக்குப் பயந்தே நான் வீட்டை விட்டுச் சென்றதாகவும்” பாதிக்கப்பட்ட சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

சிறுமியின் வாக்குமூலத்தை போலீசார் வீடியோ பதிவு செய்துகொண்ட நிலையில், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுத் தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் உட்பட மேலும் சிலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சிறுமியின் விவகாரம் வெளியே தெரிந்த நிலையில், நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் உட்பட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மேலும் சிலர் தற்போது தலைமறைவாகி உள்ளனர்.

இதன் காரணமாக, நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் உட்பட சிலர் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவர்களைத் தேடி வருகின்றனர்.

முன்னதாக, நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், நேற்றைய தினம் அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி, அக்கட்சியின் தலைமை உத்தரவு பிறப்பித்தது.

இதனிடையே, 15 வயது சிறுமியை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் உட்பட மேலும் சிலர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை கொடுத்த சம்பவம், நாகர்கோவில் பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.