தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தென் கிழக்கு வங்கக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. 

தற்போது அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, கன்னியாகுமரியில் இருந்து ஆயிரத்து 40 கிலோ மீட்டர் கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது, இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், வானிலை மையம் கூறியுள்ளது. 

காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்றும், இதனால் கன மழை கொட்டி தீர்க்கும் என்றும், வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இந்த புயலுக்கு புரெவி என்று, கடந்த சில நாட்களுக்கு முன்பு பெயர் சூட்டப்பட்டு இருந்தது.

இதன் காரணமாகத் தென் தமிழகத்தின் சில பகுதிகளிலும், கேரளாவிலும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல், தாமிரபரணி உள்ளிட்ட சில தென் மாவட்ட நதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. 

குறிப்பாக, டிசம்பர் 2 ஆம் தேதி மாலை அல்லது இரவு நேரத்தில் இந்த புயல் இலங்கையின் திரிகோணமலை அருகே கரையைக் கடக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், 3 ஆம் தேதி காலை குமரி கடலை அடைந்து மேற்கொண்டு தென் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்றும், டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிக கன மழை பெய்யக்கூடும் என்றும்,  வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இதனால், நாகை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

அத்துடன், புயல் எச்சரிக்கை மற்றும் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மக்கள், பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “வங்கக்கடலில் உருவாகும் புரெவி புயலின் தாக்கம், மதுரை வரை இருக்கும்” என்று, எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால், “ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் கரை திரும்ப வேண்டும்” என்றும், அவர் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், “தென் தமிழகத்தில் புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றும், அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

முக்கியமாக, புயல் காரணமாக தென் தமிழகத்தில் இன்று முதல் வரும் 4 ஆம் தேதி வரை மிதமான மழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக்கடல் மையப்பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அதே போல் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தெற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலையில், காரைக்கால், புதுச்சேரி துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.