அயோத்தி தீர்ப்பு எதிரொலியாக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்பு குறித்து தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார்.

Ayodhya case

இதனையடுத்து, சர்ச்சைக்குரிய வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ள நிலையில், வரலாற்றில் முதன்முறையாக உச்சநீதிமன்ற வளாகத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் உஷார் நிலைப் படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியா முழுவதும் உள்ள இந்தி மற்றும் இஸ்லாமிய வழிப்பாட்டுத் தலங்களுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாகச் சென்னையில் மட்டும் சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Ayodhya case

மேலும், அயோத்தி தீர்ப்பு தொடர்பாக, சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்கத் தமிழக போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்படி, அனைத்து விதமான சமூக வலைத்தளங்களும் போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, இன்னும் சற்று நேரத்தில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.