“15 வது மாடியிலிருந்து என்னை ஒரு கிரிக்கெட் வீரர் கட்டித் தொங்க விட்டார்” என்று, இந்தியாவின் பிரபலமான கிரிக்கெட் வீரராக வலம் வரும் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹல் ஓபனாக பேசி உள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுடன், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. 

இந்திய கிரிக்கெட் டீமில் ஆகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக வலம் வருகிறார் யுஸ்வேந்திர சஹல். 

இந்திய அணியில் இடம் பெற்ற இவர், விராட் கோலியின் அதிக நம்பிக்கையைப் பெற்ற வீரராக யுஸ்வேந்திர சஹல் திகழ்கிறார். 

இந்த நிலையில் தான், “குடி போதையில் 15 வது மாடியில் வைத்து, ஒரு ஐபிஎல் வீரர் என்னை கட்டி தொங்க விட்டார்” என்று, யுஸ்வேந்திர சஹல் கூறியுள்ளது, சக ஐபிஎல் வீரர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது, தற்போது #IPL2022 15 வது சீசன் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நிலையில், அதற்கு முன்பு வரை பெங்களூரு அணிக்கு அணியில் விளையாடி வந்த யுஸ்வேந்திர சஹல், இந்த ஏலத்தின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை ஏலத்தில் எடுத்தது. 

இதனால், இந்த  #IPL2022 15 வது சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹல், தற்போது விளையாடி வருகிறார். இந்த சீசனில் இதற்கு முந்தைய சீசனை காட்டிலும் சஹல், மிக சிறப்பாகவே பந்து வீசி வருகிறார்.

இந்த #IPL2022 15 வது சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இதுவரை 3 போட்டிகளில் விளையாடி இதுவரை 7 விக்கெட்களைச் சாய்த்து உள்ளார்.

சஹல், கிரிக்கெட் வீரர் என்பதைத் தாண்டி, எல்லோரிடமும் மிக எளிமையாக பழகும் குணம் உடையவர் என்றும், கூறப்படுகிறது. 

அத்துடன், சஹல் நிறைய டிக்டாக் வீடியோக்கள் செய்து அசத்தி உள்ளார். அவர், நன்றாக பாடுவதுடன், டான்ஸும் ஆடி தான் ஒரு ஜாலியான மனிதர் என்றும், டிக்டாக் வீடியோக்கள் மூலமாக பலரும் அறியும் வண்ணம் செய்து உள்ளார்.

இந்த நிலையில் தான், சக இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அளித்த ஒரு பேட்டியில், பழைய சம்பவம் ஒன்றையும் கூறிய சஹல், 
அனைவரையும் கடுமையாக அதிர வைத்து உள்ளார்.

இது குறித்து சஹல், பேசியிருக்கும் அந்த வீடியோ ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது தனது டிவிட்டரில் தற்போது பகிர்ந்து உள்ளது. 

அந்த வீடியோவில் பேசிய உள்ள சஹல், “நிறைய பேருக்கு இந்த சம்பவம் குறித்துத் தெரியாது. அந்த சம்பவம், கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்தது. அப்போது, நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிக்கொண்டிருந்தேன்.

பெங்களூரில் ஒரு போட்டி நடைபெற்றது. அந்த போட்டி முடிந்ததும், கெட் டு கெதர் வைத்திருந்தனர். அப்போது ஒரு சக ஐபிஎல் வீரர் அளவுக்கு அதிகமாகவே குடித்திருந்தார். 

அவரது பெயரைச் சொல்ல எனக்கு மனம் வரவில்லை. ஆனால், அவர் கடுமையாகவே குடித்திருந்தார். தன்னிலை மறந்த நிலையில் அவர் இருந்தார். 

அந்த போதையில், என்னைப் பார்த்த அவர் என்னை அருகில் அழைத்தார். அதன் பிறகு, அங்கிருந்த பால்கனிக்கு அழைத்துச் சென்ற அவர், என்னை அந்த 15 வது மாடியில் இருந்து அப்படியே தூக்கி அந்த 15 வது மாடியின் பால்கனியிலிருந்து அந்த ஐபிஎல் வீரர் என்னை தொங்க விட்டார். எனக்கு உயிரே போனது போல் இருந்தது.

இதனால், உயிர் பயத்தில் எனது கைகளால், நான் அவரது கைகளை இறுக்கமாக பிடித்திருந்தேன். கொஞ்சம் நழுவினாலும் நான் அவ்வளவு தான். 
அதே போல், அவர் நழுவ விட்டாலும் நான் காலி என்பது தெரிந்தது. அந்த சமயத்தில் வேறு சில வீரர்கள் இதைப் பார்த்து விட்டு, ஓடி வந்து அந்த வீரரிடமிருந்து என்னை சட்டென்று மீட்டனர். 

எனக்கு அப்போது மயக்கமே வந்து விட்டது. என்னை அமர வைத்து குடிக்க தண்ணீர் கொடுத்தனர். நான் அப்போது மயிரிழையில் உயிர் தப்பினேன் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த பயங்கரமான சம்பவத்திலிருந்து நான் ஒரு விசயம் தெரிந்துகொண்டேன். நாம் எங்கிருந்தாலும், என்ன நிலையில் இருந்தாலும் பொறுப்பு உணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும். அந்த சமயத்தில் நானோ அல்லது அந்த வீரரோ சிறு தவறு செய்திருந்தாலும், என் உயிரே அப்போது போயிருக்கும்” என்று, அந்த வீடியோவில் மிகவும் உருக்கமாக, கண்ணீர் கலங்கிய நிலையில் சஹல் பேசியிருக்கிறார்.

இதனையடுத்து, சஹல் பேசிய இந்த வீடியோ பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், “இந்திய கிரிக்கெட் வீரர் சஹல் உயிருடன் விளையாடிய அந்த வீரர்?” யார் என்று, இணையத்தில் பெரும் விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்த விசயத்தை, IPL நிர்வாகம் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.