ஐபிஎல் கிரிக்கெட்டில் 4 வது முறையாக கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் சென்னை அணி நாளை இறுதிப் போட்டியில் கொல்கத்தாவை எதிர்த்து  விளையாடுகிறது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான குவாலிபயர் 2 வது போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி த்ரில் வெற்றி பெற்றது.

ஷார்ஜாவில் நேற்று இரவு நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் மார்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் படி, டெல்லி
அணியால் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிக பட்சமாக தவான் 36 ரன்களும், ஷ்ரேயாஸ் ஆட்டமிழக்காமல் 30 ரன்களும் சேர்த்தனர். 

இதனையடுத்து, 20 ஓவரில் 136 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நைட் ரைடர்ஸ் களமிறங்கியது. சுப்மன் கில், வெங்கடேஷ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்து நல்ல தொடக்கத்தை தந்தனர். 

வெங்கடேஷ் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரானா 13 ரன்னில் வெளியேறினார். சுப்மன் கில் 46 ரன் எடுத்து அவேஸ்கான் பந்தில் வெளியேறினார். 

அப்போது கொல்கத்தா அணி 16.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 20 பந்தில் வெறும் 11 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ரபாடா
வீசிய 18 வது ஓவரில் 1 ரன் மட்டுமே எடுக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் டக் அவுட்டானார். அடுத்து வந்த மார்கன் டக் அவுட்டாக, அஷ்வின் வீசிய கடைசி ஓவரில் 7 ரன் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால், இந்த போட்டி டெல்லி அணிக்கு சாதகமாக மாறியது. 

அப்போது, ஷாகிப் அப் ஹசன், சுனில் நரேன் இருவரும் அடுத்தடுத்து டக் அவுட்டானார்கள். இதனால், கடைசி 2 பந்தில் 6 ரன் எடுக்க வேண்டிய பரபரப்பான கட்டத்தில் திக் திக் நிமிடங்களாக போட்டி இருந்தது. அப்போது, 5வது பந்தில், திரிபாதி சிக்சர் அடித்து, அணியை த்ரில் வெற்றி பெற வைத்தார்.

இதனால், கொல்கத்தா அணி 19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக அந்த
அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. 

இதனால், நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் முன்னாள் சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இயான் மோர்கன்
தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.

இந்த முறை புள்ளி பட்டியலில் 18 புள்ளிகளுடன் 2 வது இடத்தை பிடித்த சென்னை அணி, இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் 4 விக்கெட்
வித்தியாசத்தில் டெல்லியை தோற்கடித்து 9 வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து உள்ளது. அந்த போட்டியில், கேப்டன் தோனி கடைசி ஓவரில் 3 ஃபோர்
விளாசியது, ரசிகர்களை பரவசப்படுத்தியது பேல், இறுதிப் போட்டியிலும் கலக்குவாரா என்ற எதிர்பார்ப்பு சென்னை ரசிகர்களிடம் எழுந்து உள்ளது.

அதே சமயம் 2012, 2014 ம் ஆண்டு சாம்பியனான கொல்கத்தா அணி 3 வது முறையாக கோப்பையை வெல்ல ஆயத்தமாகி வருகிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என
இரண்டிலும் தற்போது வலுவாக காணப்படும் கொல்கத்தா அணி, ஏற்கனவே லீக் சுற்றில் 2 முறை சென்னையிடம் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் முனைப்புடன்
நேரம் பார்த்து காத்திருக்கிறது. இதனால், நாளைய இறுதி போட்டியில் அனல் பறக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.