நாடி நரம்பு முறுக்க ருத்துராஜின் ருத்ரதாண்டவத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்த 190 ரன்கள் இலக்கை, 17.3 வது ஓவரில் சேஸிங் செய்து அபார வெற்றிப் பெற்று அனைவரையும் வியக்க வைத்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 47 வது ஆட்டத்தில் சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் - டு பிளிஸ்சிஸ் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்த நிலையில், பவர் பிளே முடிவில் சென்னை அணி 44 ரன்கள் சேர்த்தது. டு பிளிஸ்சிஸ் 25 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ரெய்னா 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ரெய்னாவின் மோசமான ஃபார்ம் மீண்டும் தொடருகிறது

பின்னர் வந்த மொயின் அலி ருதுராஜ் உடன் ஜோடி சேர்ந்து 57 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை எடுத்தது. இதனையடுத்து மொயின் அலி 21 ரன்களில் ஆட்டமிழந்தார். 

தொடக்கம் முதலே சற்று ஸ்லோவாகவே விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட், 43 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். 

இதனால், 14 ஓவரில் சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. குறிப்பாக, 14 வது ஓவரை வீசிய க்ளென் ஃபிலிப்ஸ் அந்த ஓவரில் வெறும் 3 ரன்களே விட்டுக் கொடுத்தார். இதனால், கடைசி 6 ஓவர்களில், சென்னை அணி வெளுத்து வாங்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

15 ஓவர்கள் முடிவில் சென்னை 3 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்தது. பின்னர் வந்த அம்பதி ராயுடு, தோனி களமிறங்கி தனது ஃபார்மை மீட்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தோனி ராயுடுவையே களமிறக்கினார். ஆனால், அவரும வந்த வேகத்தில் 2 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதனால், 17 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்திருந்தது. இதன் பிறகு களமிறங்கிய ஜடேஜாவும் ராஜஸ்தான் பவுலர்களை ஒரு கை பார்த்தார். 19 ஓவர்களில் சென்னை 4 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்திருந்தது.

ஒரு பக்கம் விக்கெட்டுக்கள் விழுந்தாலும், மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட், நாடி நரம்பு முறுக்க கெத்துகாட்டி ருத்தரதாண்டவம் ஆடி, ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்கினார். வெறும் பவுண்டரி மழையாக பொழிந்தார். ஒரு இளம் இந்திய வீரரின் மகத்தான ஒரு இன்னிங்ஸைப் பார்த்து ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் யாவரும் சிலாகித்துப்போனார்கள்.

அவர் அடித்த ஒரு சிக்சர்கள் கிரண்டை விட்டே வெளியே பறந்தன. சிறப்பாக விளையாடிய அவர் 60 பந்துகளில் 10 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 101 ரன்கள் குவித்து அசத்தினார்.

குறிப்பாக, கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து தனது முதல் சதத்தை பூர்த்தி செய்து அசத்தி மிரட்டினார் ருதுராஜ் கெய்க்வாட்.

இதனால், சென்னை அணி 20 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. 

190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்,  தவுசன்வாலா பட்டாசாய் வெடித்துக் கிளம்பினார். அவர், 19 பந்துகளில் அரைசதம் அடித்து சென்னை அணியை திணறிவிட்டார். 

முக்கியமாக, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் வீசிய 5 வது ஓவரில், மூன்று சிக்ஸர், ஒரு பவுண்டரி என்று சரசரவென்று அவர் வெடித்துத் தள்ளிவிட்டார். 

ராஜஸ்தான் மாஸ் காட்டி விளையாடி வந்த நிலையில், முதல் 5 ஓவர்களில் 75 ரன்கள் குவித்து அசத்திவிட்டது. பிறகு, லெவிஸ் 27 பந்துகளில் தாகூர் ஓவரில் அவுட்டாக, கேஎம் ஆசிஃப், தான் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே அரைசதம் அடித்த யஷஸ்வியை 51 ரன்களில் அவுட்டாக்கினார். 

எனினும் ராஜஸ்தான் அணி 8 ஓவர்களில் 95 ரன்கள் எடுத்து சாதித்து காட்டியது. 

கிட்டத்தட்ட வெற்றிக்கு தேவையான பாதி ரன்களை அவர்கள் எட்டிவிட்டனர். அதன் பிறகும் ரன் வேகம் துளி கூட குறையாமல்  அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே, தனது பங்குக்கு சென்னையின் பவுலர்களை தெறிக்கவிட்டார். இதனால், 13 ஓவர்களுக்கெல்லாம் ராஜஸ்தான் 153 ரன்களை தொட்டுவிட்டது.

இப்படியாக கடைசி வரை களத்தில் நின்ற துபே, 42 பந்துகளில் 64 ரன்கள் எடுத்திருந்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 17.3 வது ஓவரில் 190 ரன்கள் அடித்து, தங்களது மெகா வெற்றியை சேஸிங் செய்து அசத்தியது.