ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில், இரு அணிகளிலுமே சில அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டன.

அதாவது, ஐதராபாத் அணி தரப்பில் டேவிட் வார்னருக்கு பதிலாக ஜேசன் ராய் சேர்க்கப்பட்டார். அத்துடன், மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், கலீல் அகமது ஆகியோருக்கு பதிலாக அபிஷேக் சர்மா, ப்ரியம் கர்க், சித்தார்த் கவுல் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. 

அதே போல், ராஜஸ்தான் அணியில் டேவிட் மில்லர், ஷம்ஷி, கார்த்திக் தியாகி ஆகியோருக்கு பதிலாக கிறிஸ் மோரிஸ், எவின் லீவிஸ், ஜெயதேவ் உனத்கட் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அதன்படி, இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியின் தொடக்க வீரர்களாக எவின் லெவிஸ் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.

லெவிஸ் 6 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இதனால், கேப்டன் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வாலுடன் இணைந்தார். அதிரடியாக விளையாடி ஜெய்ஸ்வால் 23 பந்துகளில் 5 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எதிர் முறையில் விளையாடிய லிவிங்ஸ்டோன் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

ஆனாலும், அங்கு அதிரடி சரவெடியில் இறங்கிய சஞ்சு சாம்சன், 41 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். குறிப்பாக, சித்தார்த் கவுல் வீசிய 16 வது ஓவரில் 20 ரன்களை விளாசி தள்ளிசார் சஞ்சு சாம்சன். 

இறுதியாக, ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. சாம்சன் 57 பந்துகளில் 82 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

165 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் ஜேசன் ராயும் - சஹாவும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கி நல்ல தொடக்கம் கொடுத்தனர். என்றாலும், சஹா 18 ரன்களில் ஆட்டமிழந்தார். 

பின்னர், ஜேசன் ராயுடன் கேப்டன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். அப்போது, அதிரடியாக விளையாடிய ஜேசன் ராய், 42 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிரியம் கார்க் டக் ஆவுட் ஆக, கேப்டன் வில்லியம்சன் நிதானமாக விளையாடி, அணியை வெற்றி பெற வைத்தார். 

அதன் படி, 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து ஐதராபாத் அணி எளிதில் வெற்றி பெற்றது. வில்லியம்சன் 41 பந்துகளில் 51 ரன்களுடன், அபிஷேக் சர்மா 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

குறிப்பாக, தொடர்ந்து தோல்வியால் துவண்டு வந்த ஐதாராபாத் அணி, நீண்ட இடைவெளிக்கு பிறகு 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

முக்கியமாக, இது வரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள ஐதராபாத் அணி 2, போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது. என்றாலும், இந்த வெற்றியின் மூலமாக, அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை நுழையில் தற்போது தக்க வைத்துக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.