நடப்பு சாம்பியன்னான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட்டின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

இதனால், மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்த போட்டியில், ரோஹித் சர்மா அணிக்குள் திரும்பியது, ரசிகர்களுக்கு குதூகலத்தை ஏற்படுத்தியது.

அந்த அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா - குவிண்டன் டி காக் களமிறங்கினர். ஆரம்பம் முதலே  அதிரடியாக ஆடிய டி காக், கொல்கத்தா வீரர்களின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு, சிக்சர்களாகவும் பறக்க விட்டு வான வேடிக்கை காட்டினார். 

அதே நேரத்தில், மறுபுறம் ரோகித் சர்மா பவுண்டரிகளாக விளாசி தள்ளிக்கொண்டு இருந்தார். இதனால், பவர்பிளே முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்து சிறப்பான தொடகத்தை கண்டது. 

4 பவுண்டரிகளை விளாசிய ரோகித் சர்மா 33 ரன்களில் அவுட்டானார். எனினும், ரோகித் சர்மா இந்த போட்டியின் மூலம் சாதனை ஒன்றையும் படைத்தார். 

ஐபிஎல் வரலாற்றில் ஓர் அணிக்கு எதிராக ஆயிரம் ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் இந்த போட்டியின் மூலம் படைத்தார். 

கொல்கத்தா அணிக்கு எதிரான இந்தப்போட்டியில் 33 ரன்கள் சேர்த்த போது, அவர், இந்த சாதனையை நிகழ்த்தினார்.

அதே நேரத்தில், எதிர் முனையில் சிறப்பாக விளையாடிய டி காக், ஐ.பி.எல் போட்டிகளில் தனது 16 வது  அரைசதத்தைப் பதிவு செய்தார். அவர் 42 பந்துகளில் 3 சிக்சர் உள்பட 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்த 16 பந்துகளில் 11 ரன்களை மட்டுமே மும்பை அடிக்கும்படியாக, கட்டுக்கோப்பாக மத்திய ஓவர்களில் பந்து வீசி அசத்தியது கேகேஆர் அணி.

அத்துடன், இந்த போட்டியில் முதல் 12 ஓவர்களில், 9 ஓவர்கள் ஸ்பின்னரையே வீச வைத்திருந்தார் கேகேர் அணியின் கேப்டன் மார்கன். அது ஓரளவுக்கு அவருக்கு கைகொடுக்கவும் செய்தது. 

அந்த நேரத்திலும், ஆபத்தான வீரர் சூர்யகுமாரின் விக்கெட்டையும் வீழ்த்த இஷான் உள்ளே நுழைந்தார். அவர் 14 ரன்னிலும், அடுத்து வந்த Pollard 21 ரன்னிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு வெறும் 155 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 

கொல்கத்தா அணி தரப்பில் லுகி பெர்குசன், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சுனில் நரைன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இதையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சார்பில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். 

தொடக்கத்தில் சுப்மன் கில் 13 ரன்களில் ஆட்டமிழக்க, கேகேஆரின் ஆட்டத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனையடுத்து, வெங்கடேஷ் ஐயருடன், ராகுல் திரிபாதி ஜோடி சேர்ந்து அதிரடியில் மிரட்டத் தொடங்கினார்கள்.

இதனால், மும்பை அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் மும்பை அணியின் பந்து வீச்சாளர்கள் அப்படியே திணறிபோனார்கள்.

இப்படியாக, 25 பந்துகளில் வெங்கடேஷ் அரைசதம் அடிக்க, அடுத்த சில நிமிடங்களிலேயே, 29 பந்துகளில், திரிபாதி அரைசதம் கடந்தார். 

பின்னர, வெங்கடேஷ் ஐயர் 30 பந்துகளில் 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியில் கலக்கிக் கொண்டிருந்த திரிபாதி கேப்டன் மோர்கனுடன் ஜோடி சேர்ந்த தொடர்ந்து அதிரடி காட்டி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். வெற்றிபெற 9 ரன்கள் தேவைப்பட்டநிலையில் மோர்கன் 7 ரன்களில் அவுட்டானார்.

இப்படியாக, ராகுல் திரிபாதி 42 பந்துகளில் 74 ரன்களும், நிதிஷ் ராணா 5 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

இறுதியாக கொல்கத்தா அணி 15.1 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 159 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.  

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 4 வது இடத்திற்கு கொல்கத்தா அணி முன்னேறி உள்ளது.