நேற்று இரவு நடந்த #RCBvsKKR போட்டியில், இரு அணி வீரர்களும் கிரீஸூக்கு வருவதும் போவதுமாக இருந்த நிலையில், இரு அணிகளுமே பந்துவீச்சில் மிரட்டியது, போட்டியை இன்னும் விறுவிறுப்பாக்கியது.

2022 IPL கிரிக்கெட் தொடரின் 15 வது சீசனானது, கடந்த 26 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இந்த சீசனில் கலந்துகொண்ட 10 அணிகளும் தலா ஒரு முறை விளையாடி முடித்த நிலையில், நேற்று இரவு 2 வது ரவுண்ட் போட்டிகளின் முதல் ஆட்டம் நடைபெற்றது. அதன் படி, இரவு நடைபெறும் 6 வது லீக் போட்டியில்  #RCBvsKKR அணிகள் மோதின. 

இதில், டாஸ் வென்ற #RCB பெங்களூரு அணியின் கேப்டன்  பாப் டு பிளெஸ்சிஸ், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

அந்த வகையில், #KKR கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான ரகானே - வெங்கடேஷ் ஐயர் களமிறங்கிய நிலையில், #RCB அணியின் பந்து வீச்சு, #KKR வீரர்களை திணறடித்தது. இதனால், வெங்கடேஷ் ஐயர் 10 ரன்களிலும், ரகானே 9 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அதன் தொடர்ச்சியாக களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், சற்று திணறிய நிலையில் வெறும் 13 ரன்களில் ஹசராங்கா பந்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

இதனால், பவர்பிளேவில் #KKR முதல் 3 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இப்படி, அடுத்தடுத்து விக்கெட் விழுந்த நிலையில் களமிறங்கிய நிதிஷ்ரானா, நிதானமாக விளையாடாமல் 5 பந்துகளில் 10 ரன்கள் அடித்த அதே வேகத்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். 

அடுத்து வந்த சுனில் நரைன், கடந்த 2017ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் #RCB அணிக்கு எதிராக 15 பந்துகளில் அரைசதம் விளாசிய நிலையில், நேற்றைய போட்டில் இறங்கிய வேகத்தில் பவுண்டரி, சிக்ஸ் என்று தனது இன்னிங்சை தொடங்கிய வேகத்தில், அடுத்த சில பந்துகளில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் களம் கண்ட ரஸில், சற்று அதிரடியாக விளையாட அவரும் 25 ரன்களில் வெளியேறினார். இப்படியாக, #RCB அணி, பந்து வீச்சில் மிரட்டி தள்ளியது. இறுதியில் பரிதாபமாக #KKR அணி 18.5 வது ஓவரில் 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால், “சென்னை அணிக்கு எதிராக விளையாடிய கொல்கத்தாவா இது?” என்கிற கேள்வியும் எழுந்தது.

பின்னர், 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் #RCB பெங்களூரு அணி களமிறங்கிய நிலையில், #KKR அணியில் உமேஷ் யாதவ்வின் அற்புதமான பந்து வீச்சு முன்னால் RCB வீரர்கள் தட்டு தடுமாறிப் போனார்கள். உமேஷ் யாதவின் பந்து வீச்சின் முதல் ஓவரிலேயே கேட்ச் ஆகி வெளியேறினார் ஓபனர் ராவத்.

பின்னர், கோலி வந்து அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாச எதிர்முனையில் நின்ற டுப்ளெஸ்ஸி அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

இப்படி, முதல் 2 ஓவர்களில் 2 விக்கெட் விழுந்த நிலையில், அடுத்த பந்திலேயே விராட் கோலியும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

இதனால், பவர்பிளே முடிவதற்குள் முக்கியமான முதல் 3 விக்கெட்களை இழந்து வேறும் 36 ரன்கள் மட்டுமே பெங்களூரு எடுத்திருந்தது. இப்படியாக, அடுத்தடுத்து வந்த வீரர்கள் எல்லாம் வருவதும் போவதுமாக இருந்த நிலையில், ஆட்டத்தில் விறுவிறுப்பு தொற்றிக்கொண்டது. 

இதனால், போட்டியை வெற்றி பெற வைக்க வேண்டிய நிர்பந்தத்துடன் களமிறங்கினார் தினேஷ் கார்த்திக், போட்டியின் திக் திக் நிமிடங்களில் தட்டு தடுமாறி களத்தில் நின்ற நிலையில், இந்த போட்டியானது KKR பக்கம் திரும்பி நின்றது. இதனால், RCBயை எளிதாக வீழ்த்தி, KKR மிக எளிதாக வெற்றிப் பெற்று விடும் என்கிற சூழ்நிலையும் உருவானது. 

அப்போது, கடைசி ஓவர் வந்தது. அந்த கடைசி ஓவரின் போது 7 விக்கெட் இழந்திருந்த RCB, வெறும் 7 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. 

அப்போது, தினேஷ் கார்த்திக் ஸ்டிரைக்கில் இருந்த நிலையில், அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார். தொடர்ந்து அடுத்த பந்திலேயே தினேஷ் கார்த்திக் பவுண்டரிக்கு விளாச, பெங்களூரு அணி தனது முதல் வெற்றியை, த்ரில் வெற்றியாக பதிவு செய்தது.