IPL2022 லீக் போட்டியில் வெற்றிக்கு அருகில் வந்த #SRH சன்ரைசர்ஸ் ஐதராபாத், ரைஸ் ஆகாமல் தோல்வி கண்ட நிலையில், மாஸ்டர் பிளானின் கடைசி நேர ட்விஸ்ட்டில் #LSG  லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் வெற்றியைத் தட்டிச் சென்றது.

#IPL2022 கிரிக்கெட் தொடரின் 15 வது சீசன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு நடைபெற்ற 12 வது லீக் போட்டியில் #SRH vs #LSG அணிகள் மோதின.

இதில், டாஸ் வென்ற #SRH ஐதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

அதன்படி #LSG லக்னோ அணியில் கேப்டன் கே.எல்.ராகுல் - குவின்டன் டீ காக் களமிறங்கிய நிலையில், டீ காக் வந்த வேகத்தில் 1 ரன்னில், வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் வெளியேறினார்.

அடுத்து வந்த எவின் லூயிஸ் 1 ரன்னிலும், மனீஷ் பாண்டே 11 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க #LSG 27 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிப்போனது.

அப்போது, கேப்டன் கே.எல்.ராகுல் - தீபக் ஹூடா ஜோடி 4 வது விக்கெட்டுக்கு சற்று அதிரடி காட்ட இந்த ஜோடி 87 ரன் சேர்த்தது. அதன்படி, தீபக் ஹூடா 33 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சர் என்று 51 ரன்கள் விளாசி அவுட்டானார். 

அதே போல், கே.எல்.ராகுலும், 50 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சர் விளாசி 68 ரன்கள் விளாசி, நடராஜன் வேகத்தில் போல்டு ஆகி நடையை கட்டினார். 

பின்னர் அடுத்தடுத்து வந்த வீரர்கள் #SRH புயல் வேக பந்து வீச்சில் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பிக்கொண்டே இருந்தனர். 

இதனால், #LSG லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியானது, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சேர்த்தது.

#SRH அணியை பொருத்தவரை பந்துவீச்சில் தொடக்கமே மிரட்டி இருந்தார்கள்.  சன்ரைசர்ஸ் அணியானது, பவர்ப்ளேயில் #LSG லக்னோ அணியை போட்டு புரட்டி எடுத்தது. அதன்படி, புவனேஷ்வர் குமாரும், வாஷிங்டன் சுந்தரும் மிரட்டியிருந்தனர் என்பதே உண்மை. பவர்ப்ளேயில் 3 ஓவர்களை வீசியிருந்த வாஷிங்டன் சுந்தர், வெறும் 11 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதன் பிறகுதான் களமிறங்கிய #LSG வீரர்கள், சற்று அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

பின்னர், 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  #SRH களமிறங்கிய நிலையில், அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் 16 ரன்கள் எடுத்தபோது, ஆவேஷ் கான் பந்துவீச்சில் அவுட்டானார். பின்னர் வந்த அபிஷேக் சர்மா - ராகுல் திரிபாதி ஜோடி சற்று நிதானமாகவும், அதிரடியாகவும் விளையாடி ரன்களை சேர்த்தனர்.

அப்போது, அபிஷேக் சர்மா 13 ரன்களில் வெளியேற, ராகுல் திரிபாதி சற்று அதிரடியாகவே விளையாடி 44 ரன்கள் விளாசி அவுட்டானார்.

இப்படி, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறத் தொடங்கியது #SRH. ஓப்பனிங்கில் இறங்கும் கேப்டன் வில்லியம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இருவருமே அதிரடியாக ஆட முயற்சி செய்து, அது கைகூடாமல் இந்த சீசனில் இதுவரை ஆடிய அனைத்து போட்டியிலும் கோட்டை விட்டு வருகின்றனர். 
இவர்கள் இருவரின் விக்கெட்டையுமே ஆவேஷ் கான், பவர்ப்ளேயிலேயே வீழ்த்தி அசத்தியிருந்தார்.

பின்னர், வாஷிங்டன் சுந்தர் - நிக்கோலஸ் பூரன் ஜோடி அதிரடி காட்ட, பூரன் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரை வீசிய ஹோல்டர், அந்த ஒரு ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளைத் தூக்கினார்.

இப்படியாக, ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

கடைசி ஓவர் வரை மிகவும் பரபரப்பாகச் சென்ற இந்த போட்டியில், #LSG 12 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியைப் பெற்றது. இதனால், வெற்றிக்கு அருகில் வந்து சென்ற #SRH சன்ரைசர்ஸ் அணி, சற்று ரைஸ் ஆகாமல் அப்படியே பின்வாங்கி தோல்வி தழுவியது.

#LSG லக்னோ அணியில் சிறப்பாக பந்துவீசிய ஆவேஷ் கான், 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை எடுத்திருந்தார்.

இதன் மூலமாக, நடப்பு #IPL2022 சீசனில்  #SRH பெரும் 2 வது தோல்வி இதுவாகும்.