பெங்களூரு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், 10 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் 14 வது சீசனின் 31வது போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சையது மைதானத்தில் நேற்று இரவு  நடைபெற்றது.  இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

பெங்களூரு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிக மோசமான ஆட்டத்தைப் பெங்களூரு வெளிப்படுத்தியது.

அதன் படி, தொடக்க வீரர்களாக விராட் கோலியும், தேவ்தத் படிக்கல்லும் களமிறங்கினர். கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 ரன்களில் பிரசித் பந்து வீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

பின்னர், நிதானமாக ஆடி வந்த படிக்கல் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெர்குசன் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஏபிடி வில்லியர்ஸ் முதல் பந்திலேயே ரஸல் வீசிய யார்க்கரில் போல்டாகி அதிர்ச்சி அளித்தார். 

தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல் என்று பெங்களூரு அணியின் முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு தொடர்ந்து அடுத்தடுத்து ஆட்டமிழக்க பெங்களூரு அணி 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டைகளுயும் இழந்து 92 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

கொல்கத்தா அணி தரப்பில் ரஸ்ஸல், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டையும், பெர்குசன் 2 விக்கெட்டையும், பிரசித் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

குறிப்பாக வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களை வீசி 13 ரன்களையும், ரஸ்ஸல் 3 ஓவர்களை வீசி 9 ரன்களையும் மட்டுமே விட்டுக் கொடுத்தனர். 

மிக முக்கியமாக, இதற்கு முன்பு , கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற இதே கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் போது, பெங்களூரு அணி தனது குறைந்த பட்ச ஸ்கோரான 49 ரன்களை பதிவு செய்ததே மிக மோசமான ஸ்கோராக இருக்கிறது.

இதனையடுத்து, 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், கொல்கத்தா அணியில் சுப்மன் கில், அறிமுக வீரர் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் களமிறங்கி தொடக்கம் முதலே அதிரடி காட்டினர். 

அதிரடியாக ஆடிவந்த சுப்மன் கில், சஹால் வீசிய 10 வது ஓவரில் முதல் பந்தில் சிராஜிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

எனினும், சுப்மன் கில் தான் சந்தித்த 34 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 48 ரன்கள் குவித்திருந்தார். 

அதே ஓவரில், கடைசி 3 பந்துகளில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்த வெங்கேடஷ் ஐயர், டி 20 போட்டியை, 10 வது ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து வைத்தார். 

இதனால், பெங்களூரு அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்ற நிலையில், புள்ளிப் பட்டியலில் 5 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 

இதனிடையே, ஐபிஎல் இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது.