மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி 134 ரன்னில் ஆல் அவுட் ஆன நிலையில், இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று உள்ளது.

12 வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 

நியூசிலாந்தில் உள்ள மவுன்ட் மாங்கானுவில் இன்று நடைபெற்ற 15 வது லீக் போட்டியில் இந்திய அணியானது, நடப்பு சாம்பியன் இங்கிலாந்துடன் மோதியது. 

அதன்படி, இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. 

அதன் படி, இந்திய அணியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய யாஷ்டிகா பாட்டியா வெறும் 8 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். 

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் மிதாலி ராஜ், வெறும் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க இந்திய அணி கடும் அதிர்ச்சி அடைந்தது. இதனால், அவர் பெரும் ஏமாற்றமுடன் திரும்பினார். 

அதன் பிறகு வந்த தீப்தி சர்மா, வந்த வேகத்தில் டக் அவுட்டமாகி நடையை கட்டினார். இதன் காரணமாக, இந்திய அணி 28 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து தட்டு தடுமாறி நின்றது.

இதனையடுத்து வந்த ஹர்மன்பிரீத் கவுர் இந்திய அணியை சரிவிலிருந்து சற்றே மீட்டெடுக்க முயன்ற நிலையில், அவரும் 14 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதன் பிறகு வந்த சிநேஹ் ராணாவும் டக் அவுட்டாக இந்திய அணி செய்வதறியாது திகைத்தது.

இப்படியாக, இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென என்று ஒருபுறம் விழுந்த நிலையில், மறு முனையில் நிதாக ஆடிய தொடக்க வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா 35 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.

இதனால், “இந்திய அணியானது 100 ரன்களை தாண்டுமா?” என்கிற சந்தேகமும் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. 

இந்த நிலையில் தான், இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிச்சா கோஷ் ரொம்பவும் பொறுப்புடன் உணர்ந்து 33 ரன்கள் எடுத்து இந்திய அணியின் ஸ்கோரை சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உயர்த்தினார். 

அப்போது, விக்கெட் கீப்பரான ரிச்சா கோஷ்க்கு பக்கபலமாக ஆல் ரவுண்டர் ஜூலன் கோஸ்வாமிவும் களத்தில் சிறிது நேரம் தாக்கு பிடித்த நிலையில், அவர் 20 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, இந்திய அணியை சரிவிலிருந்து சற்றே தேற்றினர்.

கடைசியாக, இந்திய மகளிர் அணியானது வெறும் 36.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது.

அத்துடன், இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய சரோலெட் டீன் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர்.

பின்னர், 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து மகளிர் அணி பேட்டிங் செய்து அதிரடியாகவும், விளையாடினார்கள்.

இப்படி இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி நிலையில், வெறும் 31.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 136 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றனர். 

இதன் மூலமாக இதுவரை 4 போட்டிகளில் விளையாடி உள்ள இந்திய அணியானது, 2 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.