2022 IPL தொடரின் இன்றைய 7 வது போட்டியில், #CSK சென்னை சூப்பர் கிங்ஸ் - #LSG லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் சண்டை செய்கின்றன. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியிடம் மண்ணை கவ்வியது. ஆனால், அந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும், #CSK அணியில் ஆறுதலான விசயம் என்னவென்றால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மகேந்திரசிங் தோனி, மீண்டும் ஃபார்ம்க்கு திரும்பி இருப்பது தான்.

அதே போல், இந்த ஆண்டு புதிதாக அறிமுகம் ஆன லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், தனது முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சிடம் படு தோல்வி அடைந்தது. 

இதனால், இரு அணிகளும் தங்களது முதல் தோல்வியில் இருந்து மீள இன்றயை போட்டியில் பெரிய அளவில் சண்டை செய்ய காத்திருக்கின்றன.

சென்னை அணியில் மாற்றங்கள் என்ன?

- #CSK சென்னை அணியில் முதல் போட்டியில் களத்தில் இறங்காமல் வெளியே இருந்த ஆல் ரவுண்டர் மொயீன் அலி, இன்றைய போட்டியில் களம் இறக்கவிடப்படுகிறார். இது, சென்னை அணிக்கு சற்று கூடுதல் பலமாக அமைந்து உள்ளது.

- #CSK சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டன் ஜடேஜா, கொல்கத்தாவுக்கு எதிராக முதல் போட்டியில் சற்று பதற்றத்துடன் காணப்பட்டார். அவரது கேப்டன்சி அணுகுமுறையும் தோனியுடன் ஒப்பிடப்பட்டு சற்று விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால், தற்போது முதல் போட்டியின் தோல்வியில் இருந்து கேப்டன் ஜடேஜா, நல்ல அனுபவ பாடம் கற்றுக்கொண்டார் என்றே தற்போது நம்பப்படுகிறது.

- 3 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் கேப்டன் தோனி விளாசிய அரைசதம் அணிக்கு கூடுதல் வலுசேர்த்து உள்ளது. இதனால், தோனி நல்ல ஃபார்முக்கு திரும்பி உள்ளது, சென்னை அணிக்கு கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது.

- வேகப்பந்துவீச்சை பொறுத்தவரையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் இந்த முறை களம் இறக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் மிக சிறப்பாக பந்துவீசிய இவரை, இன்றைய போட்டியில் களம் இறக்க சென்னை அணி திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

லக்னோ அணியில் மாற்றங்கள் என்ன?

- லக்னோ அணியை பொறுத்த வரை, பேட்டிங்கை பற்றி கவலைப்பட எதுவுமில்லை என்றே கூறலாம். 

- கேஎல் ராகுல் - மனிஷ் பாண்டே நல்ல துவக்கத்தில் வலுவான அடித்தளம் அமைக்கும் நிலையில் உள்ளனர்.

- டி காக், தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி ஆகியோரின் ஆளுமைகள் அச்சுறுத்தும் வகையிலேயே உள்ளது.

- எவின் லூயிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், ஜேசன் ஹோல்டர், க்ருனால் பாண்டியா என்று நல்ல பவுலர்கள் மற்றும் ஆல் ரவுண்டர்கள் அந்த அணியின் கூடுதல் பலமாகவே உள்ளது.

இப்படியாக, இரு அணிகளும் தங்களுக்கான முதல் வெற்றியை பதிவு செய்ய வீர தீரத்துடன் இன்று களம் இறங்க இருப்பதால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.