#IPL2022 சீசனில் கடைசி போட்டியிலும் CSK படு தோல்வியை அடைந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை அஸ்வின் எப்படி தட்டிப் பறித்தார் என்பது குறித்தும் தற்போது பார்க்கலாம்.

#IPL2022 சீசனின் 68 வது லீக் போட்டிகள் நேற்று இரவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், #CSK அணியும், #RR அணியும் மோதின.

ப்ளே ஆப் வாய்ப்பில் இருந்து ஏற்கனவே சென்னை அணி வெளியேறி இருந்தாலும், கடைசி லீக் போட்டியில் #CSK சென்னை ஆறுதல் வெற்றியாவது பெறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற #CSK சென்னை அணியின் கேப்டன் தோனி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் படி, #CSK சென்னை அணியில் தொடக்க வீரர்களாக கெய்க்வாட் - கான்வே ஜோடி களமிறங்கினர். 

இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கெய்க்வாட் 2 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனையடுத்து களமிறங்கிய மொயீன் அலி, வந்த வேகத்தில் அதிரடி காட்ட, #CSK அணியின் ரன் வேகம் ஒரே அடியாக உயர்ந்தது.

குறிப்பாக, மொயீன் அலி எதிர் கொண்ட ஒரே ஓவரில் ஒரு சிக்ஸ், 5 பவுண்டரிகள் விளாசி தள்ளினார். இதனால், #CSK ரன் வேகம் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

இதனால், முதல் பவர் ப்ளேவின் 6 ஓவர்களில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் குவித்தது.

இப்படியாக, தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மொயீன் அலி, 19 பந்துகளில் அதி வேகமாக 50 ரன்கள் எடுத்து அசத்திக்கொண்டிருந்தார். இதன் மூலமாக, #CSK சென்னை அணிக்காக குறைந்த பந்துகளில் 50 ரன்கள் எடுத்த லிஸ்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவிற்கு அடுத்த இடத்தில் மொயீன் அலி இடம் பெற்றார்.

அதே நேரத்தில், தொடக்க வீரர் கான்வே, மற்றும் அதன் பிறகு களமிறங்கிய ஜெகதீசன், ராயுடு உள்ளிட்ட வீரர்கள் வந்த வேகத்தில் சொற்ப ரன்களில் நடையை கட்ட, அப்போது வந்த கேப்டன் தோனி 28 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே எடுத்து ஆமை வேகத்தில் விளையாடி அவுட்டானார். இதனால், டெஸ்ட் போட்டியை போல் தோனி ஆடுகிறார் என்கிற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது.

எனினும், தொடர்ந்து அதிரடி காட்டி வந்த மொயீன் அலி 57 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் அவுட் ஆனார். இதன் மூலமாக,  #CSK சென்னை அணி 20 ஓவரில் 150 ரன்கள் எடுத்தது. 

இதனால், 151 ரன்கள் எடுத்தால் வென்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய #RR ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - பட்லர் ஜோடி களமிறங்கினார்கள். 

ஆனால், இந்த முறை பட்லர் வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளிக்க, பின்னர் வந்த கேப்டன் சாம்சன் 15 ரன்களிலும், படிக்கல் 3 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

எனினும், ஒரு முனையில் தொடர்ந்து ஆடிவந்த ஜெய்ஸ்வால் 39 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்திய நிலையில், அவரும் அவுட்டானார். 

பின்னர், கடைசி 5 ஓவரில் #RR வெற்றிக்கு 47 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அஸ்வின் - ஹெட்மயர் ஜோடி சேர்ந்த நிலையில், ஹெட்மயர் வெறும் 6 ரன்களில் நடையை கட்டினார். என்றாலும், ஒரு பக்கம் ரவிச்சந்திரன் அஸ்வின் பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்டு அதிரடியாக வானவேடிக்கை காட்டிக்கொண்டு இருந்தார். 

இப்படியாக, கடைசி ஓவரில் #RR வெற்றிக்கு வெறும் 7 ரன்கள் தேவைப்பட நிலையில், 2 பந்து மீதம் இருந்த நிலையில், #RR ராஜஸ்தான் அணி 151 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் #CSK சென்னை அணியை வீழ்த்தி, எளிதில் வெற்றி பெற்றது. 

அப்போது, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அஸ்வின், 23 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். 

இந்த வெற்றியின் மூலம், #RR அணி ப்ளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்று உள்ளதுடன், புள்ளிபட்டியலில் தற்போது #RR ராஜஸ்தான் அணி 2 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 

இதனிடையே, #IPL2022 இன்றைய லீக் போட்டியில் வாழ்வா - சாவா போராட்டத்தில் டெல்லி அணி, மும்பை அணியுடன் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.