தனியாக ஆட்டோவில் வந்த பெண்ணை 3 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் டெல்லியில்தான் இப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் சம்பாலைச் சேர்ந்த 27 வயதான இளம் பெண் ஒருவர், வட கிழக்கு டெல்லியில் உள்ள கஜூரி காஸ் என்னும் பகுதியில் இருந்து, அங்குள்ள காஷ்மீர் கேட் பகுதிக்கு செல்வதற்காகக் கடந்த 2 ஆம் தேதி சனிக் கிழமை அன்று அதிகாலை நேரத்தில் ஒரு ஆட்டோவில் ஏறி உள்ளார்.

அந்த இளம் பெண் ஆட்டோவில் ஏறியதும், அந்த ஆட்டோ டிரைவர் அந்த பெண் தனியாக வருவதைப் பார்த்து அவர் மீது சபலப்பட்டு, அவரை அடைந்தே தீர வேண்டும் என்று அடுத்த கணமே திட்டமிட்டு உள்ளார். 

இதனால், அவர் அந்த ஆட்டோவில் போகும்போதே, தன்னுடைய நண்பர் ஒருவருக்கு போன் செய்து அங்குள்ள ஐடிஓ யமுனா பாலத்தின் அருகே வரச் சொல்லி தகவல் கொடுத்திருக்கிறார்.

அதன் படியே, ஆட்டோ ஓட்டுநரின் நண்பர்கள் இருவர், குறிப்பிட்ட அந்த பகுதியில் முன்கூட்டியே வந்து காத்திருந்து உள்ளனர்.

அதே நேரத்தில், அந்த ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண் சொன்ன வழியில்லாமல் செல்லாமல், வேறு ஒரு வழியில் அதுவும் ஆட்கள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் ஆட்டோவை ஓட்டிச் சென்று உள்ளார். 

அப்போது, அந்த பெண் சந்தேகப்பட்டு அந்த டிரைவரிடம் கேட்ட போது, அவர் பதில் ஏதும் சொல்லாமல் அந்த ஆட்டோவை இன்னும் வேகமாக ஓட்டிச் சென்று, குறிப்பிட்ட ஒரு பாலத்தின் அருகே நிறுத்தி உள்ளார். அப்போது, சந்தேகம் அடைந்த அந்த பெண், ஓட்டோவில் போகும் போதே அந்த அதிகாலை நேரத்தில் உதவிக்கு சத்தம் போட்டு கத்தி உள்ளார்.

ஆனால், அதற்குள் அந்த ஆட்டோ ஓட்டுநரின் 2 கூட்டாளிகள், அங்கு ஏற்கனவே வந்து காத்திருந்த நிலையில், அந்த இருவரோடு சேர்ந்து 3 பேருமா இந்த இளம் பெண்ணை பலவந்தமாகக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். 

அப்போது, அந்த பெண் சத்தம் போட்டு கூச்சல் போட்டதும் அவரை ஒரு இடத்தில் இறக்கி விட்டு விட்டு, அங்கிருந்து அவர்கள் ஓடி உள்ளனர்.

இதனால், எழுந்து நடக்க முடியாமல் நடந்த அந்த இளம் பெண், அங்குள்ள ஐபி எஸ்டேட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், கூட்டுப் பலாத்கார வழக்கு பதிவு செய்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணை அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு மருந்து பரிசோதனை மேற்கொண்டனர். 

மேலும், இந்த வழக்கில், தப்பியோடிய குற்றவாளிகளைக் கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தி உள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.