“வேற ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போவதாக” காதலன் மிரட்டியதால், மன உளைச்சலுக்கு உள்ளான 10 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த காண்டை கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டியின் 16 வயது மகள் கவிதா, அங்குள்ள சாத்தங்குடி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்னும் சில மாதங்களில் அவர் 11 ஆம் வகுப்பு படிக்க இருந்த நிலையில் தான், இப்படியோ விபரீத சம்பவம் நடந்துள்ளது.

10 ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவி கவிதா, அதே பகுதியைச் சேர்ந்த பணராஜ் என்பவரின் மகன் 23 வயதான செல்லப்பாண்டி என்பவரைக் கடந்த 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

காதலன் செல்லப்பாண்டியோ, அதே பகுதியில் சரக்கு வேன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். தற்போது கொரோனா காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, கவிதாவும் பள்ளிக்குச் செல்ல முடியாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். அதே போல், செல்லப்பாண்டியும் வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

வேலை இல்லாமல் வீட்டிலேயே சும்மா இருப்பதற்குச் செல்லப்பாண்டிக்கு போர் அடித்திருக்கிறது போலும். அடிக்கடி தன் காதலி கவிதாவை சந்தித்துப் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இவர்களது காதல் விவகாரம் அப்படி இப்படி என்று, கவிதா வீட்டிற்கும் தெரிய வந்துள்ளது. இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த கவிதாவின் பெற்றோர், தன் மகளைக் கடுமையாக கண்டித்துள்ளனர்.

மேலும், செல்லப்பாண்டியையும் அழைத்து கவிதாவின் பெற்றோர் கண்டித்ததாகத் தெரிகிறது. இதனால், கோபம் அடைந்த செல்லப்பாண்டி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு கவிதாவை சந்தித்து, “என்னை இப்போதே திருமணம் செய்துகொள். இல்லை என்றால், நான் வேற ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வேன்” என்று கூறி மிரட்டி உள்ளார். இதன் காரணமாக, அழுதுகொண்டே வீடு திரும்பிய அந்த மாணவி, கடும் மன உளைச்சலில் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நிலையில், மனமுடைந்து காணப்பட்ட கவிதா, வீட்டின் அருகில் இருந்த அரளி விதையை அரைத்துக் குடித்து அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

பின்னர், கவிதாவின் பெற்றோர் வீடு திரும்பிய நிலையில், அவர் சடலமாகக் கிடந்துள்ளார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த சிந்துபட்டி போலீசா், உயிரிழந்த கவிதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்குத் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன், “என்னுடைய மகள் சாவிற்குக் காரணமான செல்லப்பாண்டியை உடனே கைது செய்ய வேண்டும்” என்றும் கவிதாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள செல்லப்பாண்டியை தேடி வருகின்றனர்.

இதனிடையே, “வேற ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போவதாக” காதலன் மிரட்டியதால், மன உளைச்சலுக்கு உள்ளான 10 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், திருமங்கலம் பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.