“தாஜ்மஹால், ஜெய்ப்பூர் அரச குடும்பத்திற்கு சொந்தமானது” என்று, பாஜக எம்.பி. தியா குமாரி அதிர்ச்சி அளிக்கும் வகையில் பேசி உள்ளது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் தாஜ்மஹால் பற்றிய அரசியல் பேச்சுக்கள் மற்றும் அது தொடர்பான பல சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறியது. 

இதன் காரணமாக, காதலின் நினைவு சின்னமான தாஜ்மஹாலை நேசித்த ஒட்டுமொத்த உலக மக்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதாவது, “தாஜ்மஹாலின் பெயரை ராம் மஹால் என மாற்றுவோம்” என்று, உத்தரப் பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங், அப்போது கடுமையாக விமர்சித்து பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

அத்துடன், “தாஜ்மஹால் இருந்த இடத்தில் ஏற்கெனவே இந்துக் கடவுளான சிவன் கோயில் இருந்தது என்றும், அதை இடித்து அதன் மீது ஷாஜகான், இந்த தாஜ்மஹாலைக் கட்டினார்” அப்போதைய பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங், கூறினார்.

“இதன் காரணமாக, ஆக்ராவின் நினைவுச் சின்னமான தாஜ்மஹாலுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் விரைவில் வேறு பெயரைச் சூட்டுவார்” என்றும், அந்த பாஜக பிரமுகர் வெளிப்படையாகவே தெரிவித்தார்.
 
குறிப்பாக, “தாஜ்மஹாலின் பெயரை ராம் மஹால் என மாற்றுவோம்” என்றும், அவர் கூறியதாகச் செய்திகள் வெளியாகி, இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்துக் கிளம்பியது.

இதனால், இந்தியாவே அதிர்ச்சிக்குள்ளான நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த நடிகர் பிரகாஷ்ராஜ், “தாஜ்மஹாலை எப்போது இடிக்கப்போகிறீர்கள் என்று எனக்கு முன்கூட்டியே சொல்லுங்கள். அதற்கு முன்னர் நான் கடைசியாக ஒரு முறை எனது குழந்தைகளை அழைத்துச் சென்று தாஜ்மஹாலைக் காட்டி விடுகிறேன்” என்று நக்கலாக கூறியிருந்தார்.

இது, இந்தியா முழுவதும் வைரலான நிலையில், மிகப் பெரிய அளவில் பேசும் பொருளாக மாறியது, இதனையடுத்து இந்த விசயத்தில் பாஜக பின்வாங்கியதாகவும் கூறப்பட்டது. 

இப்படியாக, கடந்த காலங்களில் தாஜ்மஹால் பற்றிய சர்ச்சைகள் வெடித்து, பின்பு ஓய்ந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக தற்போது ராஜஸ்தான் மாநில பாஜக எம்.பி.யும், ஜெய்ப்பூர் அரச குடும்ப உறுப்பினருமான தியா குமாரி, சர்ச்சைக்குறிய கருத்தை அவர் கூறி உள்ளார். 

இது குறித்து அவர் கூறியபோது, “தாஜ்மஹால், ஜெய்ப்பூர் அரச குடும்பத்திற்கு சொந்தமானது என்பதற்கான ஆவணம் தங்களிடம் இருப்பதாகவும்” அவர் தெரிவித்து உள்ளார்.

“தாஜ்மஹாலை முகலாய பேரரசர் ஷாஜகான் கைப்பற்றியதாகவும், அப்போது நீதிமன்றம் இல்லாததால், அந்த நேரத்தில் முறையீடு செய்திருக்க முடியாது” என்றும், ராஜஸ்தான் மாநில பாஜக எம்.பி. கூறியுள்ளார். 

ராஜஸ்தான் மாநில பாஜக எம்.பி. தியா குமாரி, தற்போது  தாஜ்மஹால் பற்றி பேசியிருப்பது, மீண்டும் பெரும் சர்ச்சையாக வெடித்து கிளம்பி உள்ளது. இதனால், இணையவாசிகள் பலரும் ராஜஸ்தான் மாநில பாஜக எம்.பி. தியா குமாரிக்கு எதிராகவும், தாஜ்மஹாலுக்கு ஆதரவாகவும் பல்வேறு கருத்துக்களைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இதனால், தாஜ்மஹால் விவகாரம் தற்போது பேசும் பொருளாகவே மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.