பிரதமர் வீட்டுவசதி திட்டத்தில் பல லட்சம் மோசடி அம்பலம்!

பிரதமர் வீட்டுவசதி திட்டத்தில் பல லட்சம் மோசடி அம்பலம்! - Daily news

ஏழைகள் மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கிய மக்களுக்கு, மத்திய அரசின் உதவியுடன் குறைந்த செலவில் வீடு கட்டித் தரும் திட்டம் அமலில் இருந்து வருகிறது. இந்த பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் படி, வரும், 2022க்குள், அனைவருக்கும் வீடு கட்டித் தர, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட காலத்துக்குள், இரண்டு கோடி வீடுகளை கட்டித் தர மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், மத்திய பிரதேசத்தில், 1.75 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதற்கான புதுமனை புகுவிழா ஒரு வாரத்துக்கு முன்னர் நடந்தது. பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, புதிய வீடுகளை திறந்து வைத்தார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, ``மக்களின் வறுமையை போக்கும் வகையிலும், ஏழைகளுக்கு உதவும் வகையிலும், அனைவருக்கும் வீடு கட்டித் தருவதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த கொரோனா காலத்திலும், நாடு முழுதும், 18 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. வீடுகள் கட்டும் பணிகள், முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ், ஒரு வீடு கட்டி முடிப்பதற்கு, ஏற்கனவே, 125 நாட்களாயின. கொரோனா காலத்தில், 45 - 60 நாட்களிலேயே, வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன; இது ஒரு சாதனை. கொரோனா காரணமாக வேலையிழந்து, தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள், இந்த வீடு கட்டும் திட்டத்தில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

நெருக்கடியை வாய்ப்பாக பயன்படுத்தும் விஷயத்தில், இந்த திட்டம் நல்ல முன் உதாரணமாக திகழ்கிறது. கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு, இந்த திட்டம் முக்கிய பங்கு வகித்துள்ளது. பிரதமர் வீட்டுவசதி திட்டம், ஏழைகளுக்கு வீட்டுவசதியை ஏற்படுத்தி தந்ததுடன், அவர்களது வாழ்க்கையில் நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.கடுமையாக உழைக்கும் தொழிலாளர்கள், இரவில் நிம்மதியாக துாங்குவதற்கான வாய்ப்பை, இந்த திட்டம் தந்துள்ளது" என்றார் அவர்.

ஆனால் இந்த திட்டம், தமிழகத்தில் முழுமையாக உதவியுள்ளதா என்றால், சந்தேகம்தான். ஏனெனில், தமிழகத்தில் இந்த திட்டத்தில் பல முறைகேடுகள் நடந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

அப்படியான ஒன்றாக, மன்னார்குடியில் வீடே கட்டாமல் வீடு கட்டியதற்கு வாழ்த்து தெரிவித்து மத்திய அரசிடம் இருந்து வந்த கடிதம் வந்துள்ளதாக பிரதமர் உரையாற்றுவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன், அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

தங்களின் புகாரில், வீடு கட்டுவதற்காக ரேஷன் கார்டு, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை அதிகாரிகள் பெற்றுச்சென்றதாகவும், அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்ததாக மக்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து மன்னார்குடி மோதிலால் தெருவில் வசிக்கும் மக்கள் பேசுகையில் “பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொடுக்கப்போவதாக முன்பு எங்கள் பகுதிக்கு வந்த சில அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அதன்பின் எந்த தகவலும் இல்லை, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் வீடு கட்டியதற்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவித்து தபால் மூலம் கடிதம் வந்திருக்கிறது. இது தொடர்பாக நாங்கள் பணமும் வாங்கவில்லை, வீடு கட்ட அதிகாரிகளும் ஏற்பாடு செய்யவில்லை. ஆனால் வீடு கட்டியதாக கடிதம் அனுப்பியிருக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சியில் சில கிராமங்களில் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்படாத வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டதாக கணக்கு காட்டப்பட்டிருப்பதை கிராம மக்கள் கண்டுபிடித்து புகார் அளித்திருந்த நிலையில் தற்போது மன்னார்குடியில் அதேபோல் மோசடி நடந்துள்ளது.

இதே போல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களிலும் பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டி தலைவரும் ஆரணி எம்.பியுமான விஷ்ணு பிரசாத் நேற்று லோக் ஆயுக்தாவில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது புகாரின் பேரில் 9 பஞ்சாயத்து அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ் கந்தசாமி செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த புகார்களின் தொடர்ச்சியாக, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தலையாமங்கலம் என்ற கிராமத்தில் இறந்தவர் பெயரில் வீடு கட்டி தந்ததாக தற்போது தெரியவந்துள்ளது. அந்த கிராமத்தில், மொத்தம் 240-க்கும் மேற்பட்ட கூரை வீடுகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இவர்களில், பலர் விவசாய கூலி தொழிலாளர்களே அதிகம். மத்திய அரசின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், இங்குள்ள கூரை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக கட்டித்தர 2017-19-ஆம் ஆண்டுகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

அதன்படி, கான்கிரீட் வீடு ஒன்றிற்கு 1,70,000 ரூபாய், வீட்டின் உரிமையாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஆனால் விண்ணப்பத்தாரர்கள் பலரது வங்கிக் கணக்கில் இன்னும் பணம் வரவில்லை என அப்பகுதியை சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கூறியுள்ளனர். பணம் வராவிட்டாலும், வீடு கட்டி முடிக்கப்பட்டதாக, இவர்களது பெயரில் வேறு ஒருவரது புகைப்படத்துடன் கூடிய கடிதம் தற்போது வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தாரர்கள், தலையாமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த மோசடியின் உச்சகட்டமாக, இறந்தவர்கள் பெயரிலும் வீடு கட்டியதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தலையாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தனுக்கு வீடு கட்டியதாக கடிதம் வந்துள்ளது. ஆனால் 2016-ஆம் ஆண்டிலேயே கோவிந்தன் உயிரிழந்து விட்டார்.
 

Leave a Comment