ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு இந்தியில் பதில் அளித்த ஆர்.டி.ஐ! குழப்பவா? இந்தியை வளர்க்கவா? தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கவா?

ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு இந்தியில் பதில் அளித்த ஆர்.டி.ஐ! குழப்பவா? இந்தியை வளர்க்கவா? தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கவா? - Daily news

ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு ஆர்.டி.ஐ இந்தியில் பதில் அளித்துள்ள சம்பவம், கேள்வி கேட்டவர்களைக் குழப்பவா? இந்தியை வளர்க்கவா?? தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கவா? என்று பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் இந்தி மொழி தொடர்ந்து திணிக்கப்படுவதும், அதன் பிறகு சர்ச்சைகள் எழுவதும், அதன் தொடர்ச்சியாக பின் வாங்கப்படுவதும் கடந்த காலங்களில் தமிழகத்தில் தொடர்கதையான நிகழ்வாகவே அரங்கேறி வருகிறது.

தற்போது, அதே போன்ற ஒரு சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது, தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களிடையே, கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, “காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி; காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டு இருக்கின்றனவா? என அறிந்துகொள்ளவும், நடப்பு சாகுபடி ஆண்டில் ஜுன் மற்றும் ஜுலை மாதங்களுக்குரிய தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டுள்ளதா என்ற தகவலைப் பெறவும்” காவிரி மீட்புக் குழு முயன்றது. 

இது தொடர்பாக மத்திய அரசின் நீர் வளத்துறைக்கு, காவிரி மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் மணியரசன், கடந்த ஜுலை மாதம் 16 ஆம் தேதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி 8 கேள்விகளை, ஆங்கிலத்தில் கேட்டிருந்தார்.

அதற்குப் பதில் தரும் வகையில், மத்திய நீர் வளத் துறையிலிருந்து காவிரி மீட்புக் குழுவுக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. ஆனால், அந்த கடிதம் முழுக்க முழுக்க இந்தியில் இருந்து உள்ளது. இதனால், காவிரி மீட்புக் குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்திய அரசமைப்புச் சட்டம் உறுப்பு 343 (2) இன் படி, “இந்திய அரசின் அலுவல் மொழியாக ஆங்கிலம் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. உறுப்பு 343 (3) இன் கீழ் 1963 இல் இயற்றப்பட்ட இந்திய அரசின் அலுவல் மொழிச் சட்டத்தில் செய்த திருத்தத்தின் படி, ஆங்கிலம் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்குமிடையே தொடர்ந்து தொடர்பு மொழியாக நீடித்து வருகிறது. 

அதே போல், தமிழ்நாட்டிலும் மாநில அரசின் அலுவல் மொழியாகத் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்தியச் சட்ட விதிமுறைகள் இப்படி இருக்க, தமிழ் நாட்டிலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு, இந்தியில் விடை வந்ததற்குக் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் உள்ளிட்ட பல தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

மேலும், நடைமுறையில் உள்ள சட்ட விதிமுறைகளை மீறும் வகையில், ஆர்.டி.ஐ அதிகாரிகள் இந்தி மொழியில் பதில் அளித்துள்ள சம்பவமானது, கேள்வி கேட்டவர்களைக் குழப்பவா? அத்தகைய குழப்பத்தில் தமிழகம் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கவா? அல்லது இந்தியை வளர்க்கவா?? என்று 

பல்வேறு சர்ச்சைகளை தற்போது வெடித்துள்ளன. ஆனால், இந்த சர்ச்சைகள் எல்லாம் பெரும்பாலும் தமிழ் மொழியிலேயே இருப்பதால், இதைப்பற்றியெல்லாம் இந்தி மொழி பேசும் மத்திய நீர் வளத் துறை அதிகாரிகளோ, ஆர்.டி.ஐ. அதிகாரிகளோ துளியும் கவலைப்படப் போவதில்லை என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Comment