“பணக்காரர்களுக்கு ஒன்று - ஏழைகளுக்கு ஒன்று என்று, மொத்தம் இரண்டு இந்தியாவை பாஜக அரசு உருவாக்கி உள்ளதாக” காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வரும் பல்வேறு திட்டங்களை பொது மக்கள் தொடர்ச்சியாக எதிர்த்து வருகின்றனர். என்றாலும், சில திட்டங்கள் மத்திய அரசால் பின் வாங்கப்படுவதும், சில திட்டங்கள் நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பாஜக அரசு நிறைவேற்றி வருவதும் அரங்கேறி வருகின்றன.

இப்படியான சூழ்நிலையில் தான், நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத திட்டங்களையும் எல்லாம் பாஜக அரசு கொண்டு வரும் போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தொடர்ந்து எதிர் கருத்து தெரிவித்து, கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது, “பணக்காரர்களுக்கு ஒன்று - ஏழைகளுக்கு ஒன்று என்று, மொத்தம் இரண்டு இந்தியாவை பாஜக அரசு உருவாக்கி உள்ளதாக” காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ள கருத்தில், “அதானி குழுமம், அம்புஜா சிமென்ட், ஏசிசியில் உள்ள 6.38 பில்லியன் டாலர் மதிப்பு உள்ள பங்குகளை எந்த வரியும் இல்லாமல் வாங்கும் அதே வேளையில், மில்லியன் கணக்கான ஏழைக் குழந்தைகளுக்கு சத்தான உணவுப் பெற ஆதார் அடையாள அட்டைகள் தேவைப்படுகிறது” என்று, ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாஜகவை மிக கடுமையாக விமர்சித்து உள்ளார்.

இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், “இங்கே, இரண்டு இந்தியா உள்ளது” என்று, சுட்டிக்காட்டி உள்ளார்.

அதன்படி, “பணக்காரர்கள் வரி விலக்குகள் மற்றும் கடன் தள்ளுபடிகள் மூலம் கோடிக்கணக்கில் விழுங்குகின்றனர் என்றும், அதே போல் ஏழை குழந்தைகள் அங்கன்வாடிகளில் சத்தான உணவு பெற ஆதார் அட்டை தேவைப்படுகிறது” என்றும், மிக கடுமையாக விமர்சித்து உள்ளார். 

குறிப்பாக, “பாஜக அரசு நாட்டில் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து வருகிறது” என்றும், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மிக கடுமையாக விமர்சித்து உள்ளார். ராகுல் காந்தியின் இந்த டிவிட்டை பலரும் பகிர்ந்து வரும் நிலையில், தற்போது இது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

அதே போல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜகவை விமர்சனம் செய்த ராகுல் காந்தி, “காங்கிரஸ் கட்சி கடந்த 70 ஆண்டுகளாக நாட்டுக்காக உருவாக்கி வைத்த பல்வேறு கட்டமைப்புகளை, பாஜக கடந்த 7 ஆண்டுகளில் விற்றுவிட்டது” என்று, மிக கடுமையாக விமர்சித்திருந்தார்.

அதாவது, “நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் பிரதமர் மோடி விற்றுவிட்டதாகவும், கடந்த 70 ஆண்டுகளாக இந்தியா சேர்த்த வைத்த மொத்த சொத்துக்களை வேண்டப்பட்ட தொழில் அதிபர்களுக்குப் பிரதமர் மோடி பரிசாக அளிக்கிறார்” என்றும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வெளிப்படையாகவே விமர்சனம் செய்தார்.

மேலும், “இந்தியாவின் கிரீடத்தில் உள்ள வைரங்கள் போன்ற தொழில்களைத் தனியாருக்குப் பிரதமர் மோடி விற்கிறார் என்றும், தேசிய சொத்துக்களைப் பணமாக்கும் திட்டம் என்ற பெயரில் நாட்டின் சொத்துக்கள் விற்பனை செய்யப்படுகின்றன” என்றும், ராகுல் காந்தி, மிக கடுமையாக அப்போது விமர்சித்தார்.

முக்கியமாக, “மத்திய அரசின் திட்டத்தால் 3 அல்லது 4 நிறுவனங்கள் மட்டுமே பயன்பெறும் என்றும், இளைஞர்களுக்கான அரசு வேலை வாய்ப்பு என்பதையே மத்திய அரசு ஒழிக்கப் பார்க்கிறது” என்றும், மிக கடுமையாக ராகுல் காந்தி, விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.