“அக்னிபத் திட்டத்துக்கு எதிராக தொடரும் வன்முறை போராட்டங்கள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும்” என்று, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் ஒன்று திரண்டு, மத்திய அரசு அறிவித்த “அக்னிபத்” திட்டத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், இந்தியாவில் புரட்சி ஏற்பட்டது போல் இளைஞர்களின் போராட்டம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வெடித்து கிளம்பி உள்ளது.

கடந்த ஆண்டு டெல்லியில் விவசாயிகள் மேற்கொண்ட போராட்டம் கிட்டதட்ட ஒரு ஆண்டு காலமாக மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற நிலையில்,  “அக்னிபத்” திட்டத்திற்கு எதிராக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்கள் தொடர்ந்து 4 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவது, பெரும் வன்முறையாக மாறி இருக்கிறது.

“3 ஆண்டுகள் இதற்கான படிப்பை படித்து முடித்த பிறகு, வெறும் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே பணியில் இருக்க முடியும் என்றால், அந்த 4 ஆண்டுகள் பணி முடிந்த பிறகு நாங்கள் என்ன செயய வேண்டும்?” போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் மத்திய அரசைப் பார்த்து எதிர் கேள்வி எழுப்பி உள்ளனர். அதன்படி, மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, பீகார் மாநிலத்தில் பற்றிய போராட்டத் தீ, இன்று 4 வது நாளாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி உள்ளது.

நேற்றைய தினம் தெலுங்கானா மாநிலம் செகந்திரபாத் ரயில் நிலையத்திலும் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள், அங்கு ரயிலுக்கு தீ வைத்து எரித்தனர். அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினமும் அங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, உத்திரப் பிரதேசம், டெல்லியிலும் நேற்று காலை முதல் கலவரங்களும் போராட்டங்களும், திடீர் சாலை மறியல் போராட்டங்களும் வெடித்துள்ளதால், இந்த இரு மாநிலத்திலும் ரயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதனால், டெல்லியில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

அக்னிபத்துக்கு எதிராக சென்னையிலும் போராட்டம் வெடித்து உள்ளது. சென்னை தலைமைச் செயலகம் அருகே 300 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அக்னி பாதை திட்டத்தை திரும்பப் பெறக் கோரி கண்டன முழுக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே போல், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக சென்னை போர் நினைவுச் சின்னம் முன்பு போராடிய இளைஞர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

இதன் காரணமாக, அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பிற மாநிலங்களில் நடக்கும் போராட்டத்தைப் போல், தமிழகத்திலும் ரயில் நிலையங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, சென்னை ரயில் நிலையங்கள் முழுவதும் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

அத்துடன், அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாட்டில் பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், “வேளாண் சட்டத்தை போல் அக்னிபாத் திட்டத்தையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்” என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

மேலும், “காங்கிரஸ் சார்பில் நாளைய தினம் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும்” தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தான், “அக்னிபத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்” என்று, மத்திய உள்துறை அமைச்சகம் முன்னதாக அறிவித்து உள்ளது.

இவற்றுடன், “மத்திய துணை ராணுவ படைகள் மற்றும் அசாம் ரைபிள்களில் ஆட்சேர்ப்புக்காக அக்னிவீரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பில் 3 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கவும்” உள்துறை அமைச்சகம் முடிவு செய்து இருக்கிறது.

எனினும், நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்கள் மேலும் மேலும் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் நடைபெறும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் இது வரை 12 ரயில்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளன.

அதே போல், இதுவரை 50 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டு உள்ளன. இதன் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ரயில்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டு உள்ளன.

அதன் தொடர்ச்சியாக, தற்போது “அக்னிபத் திட்டத்துக்கு எதிராக தொடரும் வன்முறை போராட்டங்கள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும்” என்று, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.