16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், “போக்சோவில் இந்த வழக்கு வராது” என்று கூறி, 22 வயது இளைஞனை நீதிமன்றம் விடுதலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி அளிக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், அந்த பகுதியில் உள்ள 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பழகி வந்திருக்கிறார்.

இந்த பழக்கத்தில், காதல் என்ற பெயரில் சிறுமியை ஏமாற்றிய அந்த இளைஞர், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து, அந்த சிறுமியை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று கூறி, அவரிடமிருந்து விலகிச் சென்றிருக்கிறார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, காதலனை நம்பி தனது கற்பை இழந்த விசயத்தை, அந்த சிறுமி அவரது பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.

இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்மந்தப்பட்ட இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.  

இதனை எதிர்த்து அந்த இளைஞர் சார்பில், கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவானது நீதிபதி சப்யசாச்சி பட்டாச்சார்யா முன்பான அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, “நீதிமன்றத்தின் கூற்றுப்படி ஊடுருவும் பாலியல் வன்கொடுமைக்கு ஒரு நபரை குற்றவாளியாக்க, பாதிக்கப்பட்டவரின் மனநிலை, முதிர்ச்சி மற்றும் முந்தைய நடத்தை ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று, குறிப்பிட்டனர். 

அத்துடன், “போக்சோ சட்டம் தொடர்பான விதிகள் குழந்தைகளின் பாதுகாப்புக்கு ஒரு சரியான கட்டமைப்பாக இருக்க வேண்டும் என்றும், மாறாக ஒரு நபர் மற்றவரை திருமணம் செய்ய கட்டாயப்படுத்துவதாக இருக்கக் கூடாது” என்றும், நீதிபதி கருத்து தெரிவித்தார்.

மேலும், “சம்மந்தப்பட்ட இளைஞருடன் அந்த சிறுமிக்கு ஏற்கனவே தொடர்பு இருப்பதை பாதிக்கப்பட்ட சிறுமி ஒப்புக்கொண்டதையும் மனுதாரர் தரப்பில் மேற்கொள் கட்டப்பட்டதால், சிறுமி மைனர் என்பதால் அவர் விரும்பி இருந்தாலும், அதனை கருத்தில் கொள்ளக்கூடாது” என்றும், அரசு தரப்பில் கூறப்பட்டது.

அப்போது, “போக்சோ சட்டத்தின் பிரிவு 2 (d) ல் குழந்தை என்ற வரையறையைக் கருத்தில் கொண்டு, 17 வயது மற்றும் 364 நாட்கள் வயதுடைய ஒருவர் கூட குழந்தையாக தகுதி பெறுவார் என்றும், ஆனால் 18 வயது நிரம்பியவருக்கும் அவருக்கும் உள்ள முதிர்ச்சியில் பெரிய வேறுபாடு இருக்காது” என்றும், நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

குறிப்பாக, “இருவருக்கும் இடையேயான சேர்க்கை இயற்கையான முறையில் இருக்கும் போது, ஆண்கள் மீது மட்டும் குற்றம் சாட்டுவது சரியல்ல” என்று கருத்து கூறிய நீதிமன்றம், “இந்த வழக்கில் இளைஞர் கட்டாயப்படுத்து பாலியல் உறவில் ஈடுபட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்றும், சுட்டிக்காட்டியது.

“அதே வேளையில், இருவரும் முன்பே பாலியல் உறவு இருப்பது இந்த வழக்கில் தெரிய வந்துள்ளதால், சம்மந்தப்பட்ட இளைஞர், சிறுமியை திருமணம் செய்ய மறுத்ததாலேயே, வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது” என்று கூறிய நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட இளைஞரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.