தமிழகத்தில், பள்ளி துணை தேர்வுகளுக்கு தடை விதிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

தமிழகத்தில், பள்ளி துணை தேர்வுகளுக்கு தடை விதிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம் - Daily news


கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடபட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் நடைபெற இருந்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம், கடந்த பொதுத் தேர்வுகளில் தோல்வியுற்ற தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒருவாரத்துக்கு முன்னர், பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் செப்.15 வெளியிடப்படும் என உள்ளதாக தேர்வுத் துறை தெரிவித்தது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்ட அறிவிப்பில், ``பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு செப்.21 முதல் 26-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் செப்.15-ம் தேதி முதல் ஹால்டிக்கெட்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேநேரம் விண்ணப்ப எண்ணை தவறவிட்டவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்வுத்துறை அலுவலகத்தை தொடர்புகொண்டு தங்கள் ஹால்டிக்கெட்களை பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட்டில் தெரிவிக்கப்பட்ட தேர்வு மையத்தில் செப்.17, 18-ம் தேதிகளில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படும். தேர்வு அட்டவணை உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்" என்று கூறப்பட்டது.

தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்து தனித்தேர்வு எழுதும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை செய்ததில் மாணவர்கள் யாருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பு பதிலை ஏற்ற நீதிமன்றம் பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்குகான தேர்வுக்கு தடைவிதிக்க மறுப்புத் தெரிவித்துள்ளது. மேலும் நாளை திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளது. தொடர்ந்து, தேர்வு நடத்திய விதம் குறித்து 8 வாரங்களுக்குள் பதில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்மூலம் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கான துணை பொதுத்தேர்வு, நாளை துவங்கும் என்பது தெளிவாகியுள்ளது. தமிழகம் முழுக்க, பத்தாம் வகுப்பு துணை பொதுத்தேர்வு, நாளை துவங்கி வரும் 26ம் தேதி வரை நடக்கிறது. கோவை மாவட்டத்தில், இத்தேர்வை புதிய பாடத்திட்டத்தில், 9 மையங்களில் 256 பேரும், பழைய பாடத்திட்டத்தில், 7 மையங்களில் 799 பேரும் எழுதுகின்றனர் என சொல்லப்படுகிறது. 

தேர்வெழுத வருவோர், மாஸ்க் கட்டாயம் அணிந்திருப்பதோடு, ஹால்டிக்கெட் கொண்டு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல், பிளஸ் 2 துணை பொதுத்தேர்வு, வரும், 28ம் தேதி வரை நடக்கிறது.இத்தேர்வை, கோவை மாவட்டத்தில், புதிய பாடத்திட்டத்தில், 9 மையங்களில் ஆயிரத்து 445 பேரும், பழைய பாடத்திட்டத்தில் மூன்று மையங்களில், 241 தேர்வர்களும் எழுதுகின்றனர்.தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தேர்வு மையங்கள், கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

Leave a Comment