“கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரிக்கை” விடுத்துள்ள வீர மரபு வீர விளையாட்டுக் கழகம், “கொரோனா இல்லாத நாடு கைலாசம் என்றும்‌ புகழாரம் சூட்டி உள்ளதால், நித்தியானந்தா குஷியாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.
 
பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்களைக் கடத்தியதாகச் சாமியார் நித்தியானந்தா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. ஆனால், இதைப் பற்றியெல்லாம் துளிகூட கவலைப்படாமல், அவர் ஜாலியாக இருந்து வருகிறார். தன்னை போலீசார் கைது செய்வார்கள் என்பதைப் பற்றி எல்லாம் துளிகூட கவலைப்படாத சாமியார் நித்தியானந்தா, ஈக்வேடார் அருகே “கைலாசா” என்ற பெயரில் ஒரு தீவை உருவாக்கி, தனி நாடாக உருவாக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

தனி நாடு அறிவிக்கும் முன்பே, “கைலாசா” நாட்டில் குடியேறுவதற்கு சுமார் 40 லட்சம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நித்தியானந்தா கூறி அனைவரையும் அடுத்தடுத்து அதிர்ச்சி அடைய வைத்தார்.

நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்ற எந்த தகவலும் தெரியாத நிலையில், வாரம் ஒரு முறை ஆன்லைனில் தனது பக்தர்களுக்குச் சத்சங்கம் நிகழ்ச்சியின் மூலம் சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறார்.

அதன் படி கடந்த வாரம் வீடியோ வெளியிட்ட நித்தியானந்தா, “கைலாசா நாட்டிற்கு என்று, தனி கரன்சியை உருவாக்கி உள்ளதாகவும், அதற்கென்று புது வங்கியைத் தொடங்க இருப்பதாகவும்” அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டார். 

அத்துடன், “எனக்கு நிறைய நன்கொடைகள் வந்திருக்கின்றன என்றும், அவற்றை நல்ல காரியங்களுக்காகச் செலவிடத் திட்டமிட்டேன் என்றும், அதற்காக நமக்கு என்று ஒரு வங்கி தொடங்க உள்ளேன்” என்றும், அடுத்தடுத்து அறிவித்தார். 

“இந்த வங்கியானது, வாடிகன் வங்கியை மாதிரியாகக் கொண்டு “ரிசர்வ் பேங்க் ஆப் கைலாசா” என்ற புதிய வங்கி மிக விரைவில் உருவாக்கப்பட உள்ளது” என்றும், நம் கைலாசா நாட்டிற்கு என்று சுமார் 300 பக்க பொருளாதார கொள்கையையும் புதிதாக உருவாக்கி உள்ளதாகவும்” கூறினார். “கைலாசா நாட்டிற்கான பணமும் தற்போது வடிவமைக்கப்பட்டு விட்டது” என்று அதிர்ச்சியைக் கிளப்பிய சாமியார் நித்தியானந்தா, “அதில், உள்நாட்டுக்கு ஒரு கரன்சியையும், வெளிநாட்டுக்கு ஒர் கரன்சியையும் அச்சடித்துள்ளோம்” என்றும், அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சியைக் கிளப்பினார்.

“56 நாடுகளுடன் வர்த்தகம் செய்யப்படும் என்றும், இந்த 56 நாடுகளில் தற்போது எது போன்ற ஒரு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறதோ, அந்த நடவடிக்கை கைலாசாவில் அப்படியே இருக்கும் என்றும், கைலாசத்தின் ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் என அனைத்தும் தங்கத்தில் இருக்கும்” பல்வேறு அதிரடியான அறிவிப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.

அவர் சொன்னது போலவே, விநாயகர் சதுர்த்தி அன்று சாமியார் நித்தியானந்தா கைலாச நாட்டின் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை வெளியிட்டார்.

அதன் தொடர்ச்சியாக, புதிய வீடியோவில் பேசிய சாமியார் நித்தியானந்தா, “என்னுடைய கைலாச நாட்டிற்கு வருகை தரும் மக்களில் திருவண்ணாமலை, மதுரை, காஞ்சிபுரம் ஆகிய 3 ஊர்களைச் சேர்ந்த மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்று, அந்த 3 மாவட்ட மக்களுக்கு சலுகைகளை” அறிவித்தார்.  

இதனையடுத்து, மதுரையில் இருந்து குமார் என்பவர், கைலாசா நாட்டில் தனது ஓட்டலைத் தொடங்க அனுமதி வேண்டும் என நித்யானந்தாவுக்கு கடிதம் எழுதினார். அவரைத் தொடர்ந்து, திருச்சியைச் சேர்ந்த நியூ சாரதாஸ் ஜவுளிக்கடை உரிமையாளரும் கைலாசா நாட்டில் தொழில் தொடங்க அனுமதி கோரி இருந்தார். 

இதன் காரணமாக, “கோரிக்கை விடுத்த இருவருக்கும் அனுமதி வழங்கும்படி உத்தரவிட்டுள்ளதாகவும், விரைவில் அனைத்து தொழில்களும் கைலாசாவில் தொடங்கப்படும்” என்றும், நித்தியானந்தா அறிவித்தார்.

இந்நிலையில், “கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும்” என்று, மதுரையைச் சேர்ந்த வீர மரபு வீர விளையாட்டுக் கழகம் சார்பில் நித்தியானந்தாவுக்குக் கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளனர்.

மேலும், அந்த கடிதத்தில், “உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா நோய் தோற்று அதிகரித்துள்ளதால், கோயில் விழாக்கள் மற்றும் வீர விளையாட்டுக்களை நடத்துவது சவாலாக உள்ளதாகவும், கொரோனா நோய்த் தொற்றின் தாக்கமே இல்லாத கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும்” என்றும், வீர மரபு வீர விளையாட்டுக் கழகம் என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 

“கைலாசா நாட்டிற்குத் தொடர்ந்து கோரிக்கைகள் வருவதாலும், பலரும் “கைலாசா நாட்டை புகழ்பாடுவதாலும், தற்போது சாமியார் நித்தியானந்தா குஷியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.