பாலியல் தொழில் செய்ய விரும்பும் ஆண்களைக் குறிவைத்து பல மோசடி கும்பல்கள்  களம் இறங்கி உள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, உலகம் முழுவதும் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முக்கியமாக, உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி மிகப் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 3 கோடி பேர் வேலை இழந்துள்ளதாகப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

அதேபோலவே, இந்தியாவிலும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், மிகப் பெரிய அளவில் பொருளாதார மந்தை நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியாவிலும் லட்சக்கணக்கானோர் வேலை இழந்து பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதன் காரணமாக, சிலர் கிடைக்கும் வேலையைக் கவுரவம் பார்க்காமல் செய்து வருகின்றனர்.

வேலை இழந்துள்ள பல ஆண்கள் வீட்டில் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், இந்த இக்காட்டான சுழலலையும் பயன்படுத்திக்கொண்டு, சில மோசடி கும்பல் தற்போது களம் இறங்கி உள்ளது.

குறிப்பாக, கொரோனா லாக் டவுனில் வேலை இழந்த இளைஞர்கள் மற்றும் ஆண்களைக் குறிவைக்கும் கும்பல் ஒன்று, அவர்களிடம் “பாலியல் தொழிலில் அதிக லாபம் சம்பாதிக்கலாம்” என்னும் பேராசையைக் காட்டி இளைஞர்களை மனதை வசியப்படுத்தி வருகிறது. இதன் மூலம், அவர்களிடமிருந்து பணம் பறிக்கும் வேலையிலும், அந்த மோசடி கும்பல் தற்போது இறங்கி உள்ளது.

மேலும், பெங்களூருவில் தான் வேலை இழந்தவர்கள் அதிக அளவில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், பெங்களூருவில் சில தெருக்களில் நோட்டீஸ் ஒட்டியும், சில சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் விளம்பரப்படுத்தி வருகிறது. அந்த விளம்பரத்தில், “ஒரு வாரத்துக்குள் நீங்கள் 40 ஆயிரம் சம்பாதிக்க வேண்டுமா? உடனடியாக எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்” என்று விளம்பரம் செய்து வருகிறது.

இந்த விளம்பரத்தை நம்பி தொடர்புகொள்ளும் நபர்களிடம், அந்த மோசடி கும்பல் பணத்தைப் பறித்துக்கொண்டு தலைமறைவாகி விடுவதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, பெங்களூருவில் உள்ள மன்யதா தொழிற் பூங்காவின் மல்டி நேஷனல் நிறுவனத்தில் பணியாற்றும் பெயர் கூற விரும்பாத இளைஞர் ஒருவர், இந்த விளம்பரத்தை நம்பி, அவர்களிடம் முதலில் ஆயிரம் ரூபாய் பதிவுக் கட்டணமாக செலுத்தி உள்ளார். அதன் பிறகு, 12 ஆயிரத்து 500 ரூபாய் உறுப்பினர் கட்டணமாகவும் அவர் செலுத்தி உள்ளார்.

அத்துடன், திருப்பி கொடுக்கப்படும் பாதுகாப்புத் தொகையாக அந்த இளைஞர் 70 ஆயிரம் ரூபாயை கூகுள் பே மூலமாக, அந்த வலைத்தள தொலைப்பேசி எண்ணுக்குப் பகிர்ந்துள்ளார். அத்துடன், அந்த தொலைப்பேசி எண்ணிற்கு தன்னுடைய புகைப்படங்களையும், இந்த இளைஞர் அனுப்பி வைத்திருக்கிறார்.

அதாவது, ஆண்கள் பாலியல் தொழில் மூலமாக நன்றாக வருமானம் ஈட்டலாம் என்று கூறி, பல பணக்கார பெண்களுக்கு ஆண் பாலியல் தொழிலாளர்கள் தேவைப்படுவதாகவும் அந்த கும்பல் ஆசை வார்த்தைகள் கூறி, அந்த இளைஞனை தன் பக்கம் இழுத்து, மோசடி செய்துள்ளது. அந்த இளைஞனும், பணம் கிடைக்கும் பேராசையில், இதற்குச் சம்மதம் கூறி, தன் பணத்தை இழந்துள்ளார்.

இந்த இளைஞர் பணம் செலுத்தியதும், சமூக வலைத்தளத்திலிருந்து சில படங்களைப் பதிவிறக்கம் செய்து அந்த கும்பல் சில புகைப்படங்களையும் இவருக்கு அனுப்பி உள்ளது. ஆனால், அதன் பிறகு அந்த குறிப்பிட்ட தொலைப்பேசி எண்ணில் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல், அந்த கும்பல் தலைமறைவாகி உள்ளது. அப்போது தான், தான் ஏமாற்றப்பட்டது அந்த இளைஞருக்குத் தெரிய வந்திருக்கிறது. இது குறித்து, பெங்களூரு வடக்கு CEN காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர் புகார் அளித்தார். 

இந்த இளைஞரைப் போலவே, பாதிக்கப்பட்ட மற்றொரு இளைஞரும் 30 ஆயிரம் ரூபாய் வரை அந்த மோசடி கும்பலிடம் இழந்திருக்கிறார். அவரும், பாலியல் தொழிலையே குறிப்பிட்டு ஏமாற்றப்பட்டு இருக்கிறார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த மோசடி கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இது குறித்துப் பேசிய பெங்களூரு வடக்கு காவல் நிலைய உயர் போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, “லாக்டவுன் காலத்தில் வேலை இழந்தவர்களையும், குறைவான சம்பளத்திற்கு வேலை பார்க்கும் ஆண்களைக் குறிவைத்துமே, இந்த இக்காட்டான சூழ்நிலையைக் கூட தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, அந்த கும்பல் மோசடியில் இறங்கி இருப்பது கவலை அளிப்பதாக உள்ளதாகக் கூறியுள்ளனர்.

“இந்த மோசடி கும்பலிடம் மன உளைச்சலுக்கு ஆளாகும் இளைஞர்கள் தொடங்கிப் படித்த இளைஞர்களும் தெரியாமல் மாட்டிக்கொள்கிறார்கள் என்றும், இதனால் ஆண்கள் இனி எச்சரிக்கையாகவும் கவனமுடனும் இருக்க வேண்டும்” என்றும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.