ஐந்து மாதங்களுக்குப் பின் திறக்கப்படும் உயர் நீதிமன்றம்!

ஐந்து மாதங்களுக்குப் பின் திறக்கப்படும் உயர் நீதிமன்றம்! - Daily news

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் முக்கிய நடவடிக்கையாக மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் காலவரையின்றி மூடப்பட்டன. அதுபோலவே சென்னை உயர் நீதிமன்றமும் மூடப்பட்டு, அனைத்து வழக்குகளும் காணொலி வாயிலாக விசாரிக்கப்பட்டு வந்தது. அதுவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இடையில் ஜூன் மாதம் நீதிமன்றம் செயல்படத் தொடங்கிய நிலையில், நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று பரவியதால் மூடப்பட்டது.


இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்குகள் அனைத்தையும் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் நேரடியாக விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான ஏழு மூத்த நீதிபதிகள் அடங்கிய நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நேற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இரு நீதிபதிகள் கொண்ட ஆறு அமர்வுகளில் நேரடி வழக்கு விசாரணையை தொடங்கப்படவுள்ளது. காலையில் மூன்று அமர்வு, மாலையில் மூன்று அமர்வு என வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளன. சோதனை அடிப்படையில் இரண்டு வாரங்கள் நடைபெறும் இந்த அமர்வுகளின் விசாரணையின்போது யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாத பட்சத்தில், தனி நீதிபதிகள் அமர்விலும் விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம், புதுச்சேரியில் நீதிமன்றங்கள் இன்னும் திறக்கப்படாததால் வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், நீதிமன்றங்களை திறக்க வேண்டும் என பார் கவுன்சில் கோரிக்கை வைத்திருந்தது. இந்த நிலையில் 160 நாட்களுக்குப் பிறகு உயர் நீதிமன்றம் திறக்கப்பட உள்ளது என வந்துள்ள செய்தியால் வழக்கறிஞர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Leave a Comment