முடக்கப்பட்ட சசிகலாவின் சொத்துக்குரிய இடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டன!

முடக்கப்பட்ட சசிகலாவின் சொத்துக்குரிய இடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டன! - Daily news


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அவரின் தோழியும் - இரண்டாவது குற்றவாளியாக கருதப்படும் சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றார். இப்படியான நிலையில், அவர் விடுதலையாகும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

வரப்போகும் 2021 சட்டமன்ற தேர்தலுக்குமுன் அவர் நிச்சயம் விடுதலையாகி வடுவார் என்ற நிலையில் அவரது விடுதலை மூலம் தமிழக அரசியல் களத்தில் என்ன விதமான மாற்றங்கள் இருக்கும் என்பட்து தொடர்பான பல யூகங்கள் கிளம்பியுள்ளன. 
 
சசிகலா தனக்கு தண்டனை கிடைத்தவுடன் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் நாற்காலியில் அமர்த்தினார். ஆனால், பின்னர் எடப்பாடி பழனிச்சாமியும், தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து விட்டனர். அதனால் சசிகலா ஓரம்கட்டப்பட்டார். எனினும் சசிகலாவிற்கு இன்னும் கட்சிக்குள் பெரும் ஆதரவு இருப்பதாகவும், அவர் விடுதலையானால் அரசியல் களம் மாறும் என்றும் கூறப்படுகிறது.

அவர் ஒரு அரசியல் சக்தியாக மாறாமல் இருக்க, தேர்தல் வரை அவர் விடுதலையை தள்ளிப் போட சில காய்நகர்த்தல்கள் செய்யப்படுகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், பினாமி பெயர்களில் வாங்கப்பட்ட சசிகலாவின் ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமானவரித் துறையினர் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 31) முடக்கினர். கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் உட்பட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அப்படி கைப்பற்றப்பட்ட சொத்துக்களில், ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டன் வேதா நிலையத்திற்கு எதிரே கட்டிக்கொண்டிருக்கும் புதிய கட்டிடமும் அடங்கும். இதில் வேதா நிலையம், தற்போது முழுவதுமாக அரசுடைமையாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியான நிலையில் சசிகலாவின் தாம்பரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடத்தில் உள்ள சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. இந்த சொத்துக்கள் அனைத்தும் 2003 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ஹரிசந்தனி எஸ்டேட் என்ற பெயரில் வாங்கப்பட்டது என கூறப்படுகிறது.

சசிகலா மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் வீடுகளில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியபோது கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், பினாமி பெயரில் சசிகலா தரப்பினர் சொத்துக்கள் வாங்கியது தெரியவந்திருப்பதாக வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்துதான் வருமானவரித் துறையின் பினாமி தடுப்புப் பிரிவு சட்டத்தின்கீழ் தற்போது, ரூ.300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன எனக்கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பினாமி பிரமுகர்களுக்கும் அந்த சொத்துக்களை பத்திரப்பதிவு செய்த அலுவலகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பினாமி நிறுவனங்களை நடத்தும் 2 நபர்களின் பெயர்களில் இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. அவர்கள் இருவரும் சசிகலாவின் உறவினர்கள்.

இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், வணிக வளாகம் என 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சசிகலா 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி ரூ.1,500 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு தனியார் நிறுவனம், சசிகலாவின் பினாமி நிறுவனமாக செயல்பட்டு வருவதும், இந்த நிறுவனத்தின் மூலம் சசிகலா சென்னையில் உள்ள போயஸ் கார்டன் மற்றும் தாம்பரம், கூடுவாஞ்சேரி, ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் போன்ற பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவை கொண்ட 65 சொத்துகளை வாங்கி இருப்பதும் தெரியவந்தது.

இந்த சொத்துகளில் சென்னை போயஸ் கார்டனில் வேதா நிலையம் எதிரே சுமார் 24 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள பங்களாவும் ஒன்றாகும் என்று கூறப்படுகிறது.

ரூ.300 கோடி மதிப்பிலான இந்த சொத்துகளை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கம் செய்துள்ளனர். இதுதொடர்பான தகவல் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நோட்டீஸ் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் முடக்கப்பட்ட சசிகலாவின் ரூ.300 கோடி சொத்துக்கான இடங்களில் வருமான வரித்துறை நோட்டீஸ் ஒட்டியது. சென்னை போயஸ் கார்டனில் சசிகலா புதிதாக கட்டி வரும் வீட்டில் சொத்துகளை முடக்கியதற்கான நோட்டீஸை வருமான வரித்துறை ஒட்டியது.

Leave a Comment