நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பாஜக தலைவர் ஒருவர் பேசியதால், இந்திய பொருட்களுக்கு இஸ்லாமிய நாடுகளில் அதிரடியாக தடை விதிக்கப்பட்டதுடன், சவூதியில் வேலை பார்த்து வந்த பல இந்தியர்களும் தற்போது வேலையை விட்டு நீக்கப்பட்டு, இந்தியாவிற்கே திருப்பி அனுப்பப்படும் சம்பவங்களும் நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நுபுர் சர்மா மற்றும் இவரது கருத்து ஆதரவு தெரிவித்த டிவிட் செய்த பாஜகவின் டெல்லி நிர்வாகியான நவீன்குமார் ஜிந்தால் ஆகிய இருவரும் அதிரடியாக பாஜகவில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலும், “இந்தியாவில் இஸ்லாமியர்கள் குறிவைக்கப்படுகின்றனர் என்றும், பாஜகவுக்கு வளைகுடா ஒத்துழைப்பு சபை, தாலிபான் அரசு உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய அரசுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

அத்துடன், “உலகம் முழுவதும் வாழும் 200 கோடிக்கும் அதிகமான இஸ்லாமியர்களை புண்படுத்தும் வகையில், பாஜக நிர்வாகிகள் தெரிவித்த இந்த அவதூரான கருத்துக்கு “இந்திய அரசு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்” என்று, குவைத் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, “நபிகள் நாயகம் குறித்த பாஜக நிர்வாகிகளின் விமர்சனத்தை கடுமையாக கண்டித்து உள்ள இஸ்லாமிய நாடுகள், இந்திய பொருட்களை புறக்கணிக்க வேண்டும்” என்று, போர்க்கொடி தூக்கி உள்ளன.

அது சர்ச்சைக்குறிய விவகாரம் தொடர்பாக இஸ்லாமிய ஒத்துழைப்பு சபையின் பொது செயலாளர் நயீஃப் பலாஹ், கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். 

இது பற்றிய பேசிய அவர், “பாஜக செய்தித் தொடர்பாளரின் இந்த கருத்து தவறானது என்றும், அதை நிராகரிக்க வேண்டும் என்றும், நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசியதை கண்டிக்கிறேன்” என்றும், பதிவு செய்து உள்ளார். 

“குறிப்பிட்ட மதத்தினரின் தீர்க்கதரிசிகள், மத சின்னங்கள், வழிபாட்டுத் தளங்கள் குறிவைக்கப்படுகின்றன என்றும், மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தி, வெறுப்பை தூண்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்” என்றும், இந்தியாவை அவர் வலியுறுது்தி உள்ளார்.

இந்த நிலையில் தான், சவூதி அரேபியா, பக்ரைன், குவைத் போன்ற நாடுகளில் கடைகளில் இருந்து இந்திய பொருட்கள் அதிரடியாக தற்போது அகற்றப்பட்டு உள்ளன. 

அந்நாடுகளில் உள்ள சில கடைகளில் “இந்திய பொருட்களை தடை செய்யப்பட்ட பொருட்கள்” என்று, அதிரடியாகவே ஸ்டிக்கர் ஒட்டி மூடிவைத்து உள்ளதாகவும், அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

அதே போல், பாஜகவைச் சேர்ந்த நுபுர் சர்மாவின் இந்த கருத்து மற்றும் அதற்கான எதிர்வினைகள் காரணமாக உலகம் முழுவதும் உள்ள  இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என்று, ஏற்கனவே செய்திகள் வெளியானது. 

இதனால், அரபு நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படலாம் என்றும் தகவல்கள் வெளியானது. 

அத்துடன், “அரபு நாடுகளில் தென்னிந்தியர்கள் பலர் வேலை பார்த்து வரும் நிலையில், சிறிய அளவில் வேலை பார்ப்பவர்கள் உயர் பதவிகளில் பணியில் உள்ள அனைத்து இந்தியர்கள் இதனால் பாதிக்கப்படலாம்” என்கிற செய்திகளும் வெளியானது.

இந்த நிலையில் தான், “இந்தியாவில் இப்படியாக எதிர்மறையாக பரப்பப்படும் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரங்கள் காரணமாக, ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகளில் பணியாற்றி வந்த இந்தியர்கள் தற்போது, தங்களது வேலையை இழந்த வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதன்படி, “உங்கள் நாட்டில் எங்கள் இஸ்லாமியர்களை கடுமையாக அவமதிக்கிறார்கள், அதனால் எங்கள் நாட்டில் உங்களுக்கு வேலை எல்லாம் கொடுக்க முடியாது” என்று, இந்தியர்களை வெளியேற்றும் போக்கு தற்போது அங்கு அதிகரித்து வருகின்றன.

அதாவது, அரபு நாடுகளில் இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, பல ஆயிரம் இந்துக்களும் அங்கு வேலை செய்து வருகிறார்கள். 

இந்த நிலையில் தான், பாஜகவைச் சேர்ந்த நுபுர் சர்மா போன்றோரின் மத ரீதியான சர்ச்சைக்குறிய பேச்சால், இந்தியர்கள் வேலை இழந்து வருகின்றனர். 

அதன்படி, சவூதி அரேபியாவில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் இந்துக்கள் பணி நீக்கம் செய்யப்படுவதும், பலரும் கட்டாய விடுப்பும் செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

முக்கியமாக, அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பணிபுரிந்த 7 பேருக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டதாக சக இந்திய ஊழியர் ஒருவர்  தெரிவித்து இருக்கிறார். 

அதே போல், அந்நாட்டில் தச்சர் வேலை செய்து வரும் இந்தியருக்கு தான் வழங்கிய ஸ்பான்சர்சிப்பை ரத்து செய்துவிட்டதாக, அந்நாட்டைச் சேர்ந்த ஒருவர் டிவிட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

அதாவது, குடும்ப வறுமை காரணமாக, கடன் வாங்கி வெளி நாடுகளுக்கு வேலைக்கு சென்று கஷ்டப்பட்டு வேலை செய்து வந்த நமது ஏழை இந்தியர்கள் பலரும், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தங்களது உழைப்பால் உயர்ந்து வரும் இப்படியான நிலையில், பாஜகவைச் சேர்ந்த நுபுர் சர்மா போன்றவர்களின் ஆணவமான பேச்சால், அவர்களில் பலரும் தற்போது வேலையை இழந்து, இந்தியா திரும்பும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

இதனால், இஸ்லாமிய நாடுகளில் வேலை செய்து வரும் சக இந்தியர்கள் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளதுடன், இந்தியாவில் இருந்து இஸ்லாமிய நாடுகளில் பணியாற்றி வருபவர்களின் இந்திய குடும்பத்தினரும் பெரும் கலக்கமடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.