கர்நாடகத்தில் கடந்த சில மாதங்களாக ஹிஜாப் விவகாரம், கோவில் திருவிழாக்களில் இஸ்லாமியர்கள் வியாபாரம் செய்ய தடை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளால் மத ரீதியான சர்ச்சைகள் நீடித்து வந்தன. இந்நிலையில் கர்நாடகத்தில் உள்ள ஒரு கோவிலில் திருக்குரான் வசனத்துடன் திருவிழாவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கர்நாடகாவில் உள்ள இந்துத்துவா அமைப்பினர்கள் இந்து கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களில் இஸ்லாமியர்கள் வணிகம் செய்ய அனுமதி கிடையாது என்றும் ஹலால் மாமிசத்தை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் மசூதிகளில் ஒலி பெருக்கியை தடை செய்ய வேண்டும் என்றும் பல்வேறு சர்ச்சைக்குரிய பிரச்சாரங்களை முன்னெடுத்து வைத்தனர். 

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ‘ஹிஜாப்’ அணிந்து வர கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. இதை எதிர்த்து அந்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு, தலைப்பாகை அணிந்து போராட்டம் நடத்தினர். இதனால் வன்முறை ஏற்பட்டது.

இதற்கிடையில் கர்நாடக ஐகோர்ட்டு மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வகுப்பிற்கு வருவதற்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு அளித்தது. மேலும் அப்போது முஸ்லிம் மாணவிகள் பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து வந்தனர். இதைப்பார்த்த கல்லூரி தலைமை ஆசிரியர்கள் மற்றும் போலீசார் மாணவிகளிடம் ஹிஜாப்பை கழற்றிவிட்டு வகுப்புக்குள் செல்லும்படி தெரிவித்தனர். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். 

கர்நாடக கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மாணவிகள் தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டி வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.  இதை தொடர்ந்து ஐகோர்ட்டு கர்நாடக அரசு விதித்த தடை செல்லும்' என தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து யாதகிரியில் முஸ்லிம் மாணவிகள் தேர்வை புறக்கணித்தனர்.

இந்நிலையில் ஹலால் மாமிசத்தை இந்துக்கள் வாங்கக்கூடாது என பஜ்ரங் தள் அமைப்பினர் கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு வெளியிட்டு 24 மணி நேரத்திற்குள் ஹலால் மாமிசம் வழங்கப் மறுத்த கடைக்காரர் மீதும் உணவக உரிமையாளர் மீதும் இந்துத்துவா அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் இந்துத்துவா அமைப்பினர்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள் கடைகளுக்குச் சென்று ஹலால் இல்லாத மாமிசத்தை வழங்கவேண்டும் ஹலால் இல்லாத உணவை பரிமாற வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கடைக்காரர்கள் ஹலால் இல்லாமல் செயல்படும் கடைகளுக்கு சென்று தங்களுக்கு தேவையானதை வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறிய நிலையில், இரண்டு கடை உரிமையாளர்கள் மீது இந்துத்துவ அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹொசா மனை என்ற பகுதியில் தோசிப் என்ற மாமிச கடைக்காரர் மீதும் பலைய பத்ராவதி பகுதியில் உள்ள உணவக உரிமையாளர் மீதும்‌ தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் காவல்துறையிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்த நிலையில் இந்துத்துவா அமைப்பை சேர்ந்த ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள பேலூரில் அமைந்திருக்கும் சென்னகேசவா கோவிலில் தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்த தேர் திருவிழாவின் போது இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானில் இருந்து சில வாசகங்கள் ஓதப்படுவது வழக்கம். 

அதனைத்தொடர்ந்து அதன்படி இஸ்லாமிய மதகுருவான மவுலவி சைய்யது சஜ்ஜாத் பாஷா என்பவர் திருக்குரானில் இருந்து வசனங்களை ஓதினார். மேலும் கோவிலுக்கு அருகில் உள்ள தர்காவிற்கு கரகம் எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் தொடர்ந்து இந்த நிகழ்வுக்கு சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டன. எனினும் கோவில் நிர்வாகமும், பக்தர்களும் அவற்றை பொருட்படுத்தாமல் பாரம்பரிய முறைப்படி திருக்குரான் வசனத்துடன் திருவிழாவை தொடங்கினர். மதரீதியான பிரச்சினைகளுக்கு இடையில் மத நல்லிணக்கத்திற்கு சான்றாக கர்நாடகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.