மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்டம் 300 நாள்களைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய இந்திய விவசாயிகளின் போராட்டம் கிட்டதட்ட 300 நாட்களைக் கடந்து தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

மத்திய அரசுடன் இது வரை பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும், தோல்வியில் முடிந்துபோனதால், விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசு துளியும் இறங்கி வரவில்லை என்றே விமர்சிக்கப்பட்டு வருகிறது.

எனினும், “தங்களது கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும்” என்றும், விவசாயச் சங்கங்கள் தெரிவித்து உள்ளன. 

மத்திய அரசின் இந்த விடாப்பிடியான போக்கைக் கண்டித்து, நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணியும் நடத்தினார்கள்.

அத்துடன், 3 புதிய சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருப்பதால் இந்த பிரச்சினையில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடித்து வருகிறது. 

மேலும், போராட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசுக்கு எதிராக வரும் 27 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள விவசாயிகளைத் திரட்டி, “பாரத் பந்த் நடத்த” விவசாய சங்கங்கள் ஒருமனதாக முடிவெடுத்து நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளன.

இந்த நாடு தழுவிய போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த விவசாயிகள் அது தொடர்பான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் இந்த போராட்டத்திற்குக் காங்கிரஸ், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து உள்ளானர். 

இதனிடையே, விவசாயிகள் டெல்லியில் மேற்கொண்டுள்ள போராட்டம் 300 நாள்களை நிறைவு செய்துள்ள நிலையில், இது குறித்து சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அந்த அறிக்கையில், “டெல்லி எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் அமைதியாக நடத்தி வரும் அறப்போர் 300 நாள்களைக் கடந்திருப்பதாக” கூறியுள்ளது. 

“விவசாயிகளின் கோரிக்கை தெளிவாகத் தெரிந்தாலும், மத்திய அரசு அவற்றை ஏற்க மறுப்பதாக” குறிப்பிட்டுள்ள அந்த அமைப்பு, “கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும்” என்றும் தெரிவித்து உள்ளது. 

மேலும், “விவசாயிகள் நாட்டின் மிகப் பெரிய தொழிலாளர் சக்தியாக இருந்தாலும், தேர்தலில் விவசாயிகளின் வாக்குகளால் பாஜக வென்றது என்பதை மறந்துவிட்டது என்றும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டமானது நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளின் விருப்பத்திற்கும், தீர்கத்திற்கும் நம்பிக்கைக்கும் ஒரு சான்றாக மாறியிருக்கிறது” என்றும், சம்யுக்த் கிசான் மோர்ச்சா கூறியுள்ளது.

இந்த நிலையில், “உரிமைகள் மற்றும் சுயமரியாதைக்காகப் போராடி வரும் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுடன் காங்கிரஸ் துணை நிற்கும்” என்று, ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.