பெண் அடிமைத்தனத்தையும் ஆண் ஆதிக்கத்தையும் ஒழிப்பதுடன் பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்கும் வகையில் 1989-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில், 'குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை உண்டு' என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. அதேபோல, 2005-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது இந்தியா முழுவதும் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வழங்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை இல்லை என்றும், இந்தச் சட்டம் 2005-ல் கொண்டுவரப்பட்டதால் அதற்கு முன்பு அப்பாவை இழந்த பெண்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீண்ட காலமாக நடந்துகொண்டிருந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிப்பட்டுள்ளது.

அதில், குடும்ப சொத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சமபங்கு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2005ஆம் ஆண்டு வாரிசு உரிமை சட்டத்தின் கீழ் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தனது தீர்ப்பில், ''பெற்றோருக்கு ஒருமுறை மகள் என்றால் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு மகள்தான். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. பூர்வீக சொத்தில் ஆணுக்கு நிகராக பெண்ணுக்கும் உரிமை உண்டு'' என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பெண்களுக்கான சொத்து உரிமைகளை 1956-ல் நிறைவேற்றப்பட்ட இந்து வாரிசுச் சட்டப்படிதான் வழங்கப்பட்டு வந்தது. இதற்கு முன்னதாக 'இந்து பெண்கள் சொத்து சட்டம்' என்று இருந்தது. இதன்படி, பிறந்த வீட்டில் தங்குவதற்கு மட்டுமே உரிமை இருந்தது. சொத்தில் உரிமை கொண்டாட முடியாது. பிறந்த வீட்டில் கொடுக்கப்பட்ட சீதனம் மட்டுமே இவர்களுக்கு சொத்தாக கருதப்பட்டது.

இதையடுத்து 1956, ஜூலை 4ஆம் தேதி 'இந்து வாரிசுச் சட்டம் 1956' என்று கொண்டு வரப்பட்ட சட்டத்தில் பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உண்டு கூறப்பட்டது. ஒரு குடும்பத்தில் ஒரு ஆண்மகன், ஒரு மகள் இருந்தால், இருவருக்கும் சமமாக சொத்தில் பங்கு இருக்கிறது என்று இந்த வாரிசு சட்டம் வலியுறுத்தியது.

முன்னர் இருந்த சட்டங்களின்படி பெற்றோர் வீட்டில் பெண்கள் பங்கு கேட்கும் உரிமை இல்லை. 2005ல் ஏற்படுத்தப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி, தந்தையின் காலத்திற்குப் பின்னர் பங்கு கேட்கும் உரிமை வழங்கப்பட்டது. பெண்ணின் சீதனம் அவளது தனிப்பட்ட சொத்தாகவே பார்க்கப்பட்டது. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் கூட அவை அவளது தனிப்பட்ட சொத்தாக கருதப்படும். அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கும் உரிமை அந்த பெண்ணுக்கு உண்டு.

இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பு 2005 இந்து வாரிசு திருத்த சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ளது. அந்த சட்ட திருத்தத்தில், '25.3.1989 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட ஒரு இந்து பெண் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கேட்க முடியாது. அதற்கு பின்னர் திருமணம் செய்துகொண்ட பெண்கள் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோர உரிமை உண்டு. ஆனால்,சொத்து பாகப்பிரிவினை 25.3.1989 தேதிக்கு முன்பு செய்யப்பட்டிருந்தால் உரிமை கோர முடியாது.

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,பூர்வீக சொத்தில் சம பங்கினை பெண்கள் பெறலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டென 1989ம் ஆண்டே சட்டம் கொண்டு வந்த முத்தமிழறிஞர் கலைஞர் - திமுகவுக்கு கிடைத்த வெற்றி இது. உரிமை கொண்டவர்களாக பெண்ணினம் உயர அடித்தளம் அமைக்கும் தீர்ப்பு என்று பதிவிட்டுள்ளார்.

ஆளும் கட்சி சார்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், இந்த தீர்ப்புக்கு தனது வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி தனது ட்விட்டீல்,  ``சொத்துகளில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உண்டு என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. சமூக நீதியை காப்பாற்றும் விதமாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது" என்று கூறியுள்ளார் அவர்.

இதேபோல துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.