திண்டுக்கல்லில் 8 வயது சிறுமியை, 4 சிறுவர்கள் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே உள்ள கக்கன் நகர் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி, அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்துக்கொண்டு வந்தார். தற்போது கொரோனா வைரசால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, பெற்றோர் உடன் வீட்டில் இருந்து வந்தார்.

அந்த சிறுமியின் பெற்றோர் தினமும் வேலைக்குச் சென்று வந்துள்ளனர். அப்போது, சிறுமி மட்டும் காலையில் சிறிது நேரம் வீட்டிற்கு வெளியே சற்று நேரம் விளையாடி விட்டு, அதன் பிறகு வீட்டில் தனியாக இருப்பது வழக்கம்.

இதனைத் தெரிந்துகொண்ட அதே பகுதியைச் சேர்ந்த 12 மற்றும் 13 வயது கொண்ட 4 மாணவர்கள், சிறுமியின் வீட்டிற்கு வந்து, சிறுமியை மிரட்டிக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். இதில், சிறுமி வலி தாங்காமல் சத்தம் போட்டு அழவே, அந்த 4 சிறுவர்களும் பயந்து பாதியிலேயே ஓடியதாகத் தெரிகிறது.

இதனையடுத்து, பெற்றோர் வரும் வரை வீட்டில் தனியாக இருந்த சிறுமி அழுதுகொண்டே இருந்ததாகத் தெரிகிறது. சிறுமியின் பெற்றோர் வந்ததும், அழுதுகொண்டு இருந்த சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது, “என்னை 4 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கதையைக் கூறி, மேலும் அவர் அழுதுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், 4 சிறுவர்களைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த 4 சிறுவர்களும் சேர்ந்து சிறுமியை பாலியன் வன்கொடுமை செய்ய முயன்றது உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து, போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுவர்கள் 4 பேரையும் அந்த மாவட்டத்தில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு காரணமாக, பலரும் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால், அவர்களில் அன்றாட வேளைகளிலிருந்தும் தினமும் சந்தித்து உரையாடும் நபர்களிடமிருந்தும் பிரிந்து விலகி இருப்பதால் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதன் காரணமாகவே திரையுலக பிரபலங்கள் முதல், சாமியன் வரை மன உளைச்சலால், கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து தற்கொலை செய்து வரும் நிலையில், வீட்டில் இப்படியாகத் தனியாக இருக்கும் சிறுவர்களும், இனம் புரியாத வயதில் இது போன்ற தவறுகளைச் செய்துவிட்டு, அதன் பிறகு மாட்டிக்கொள்வதும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. 

இதனிடையே, 8 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 4 சிறார்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம், திண்டுக்கல்லில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.