இன்னும் இரண்டு வருடங்களில் சரியாகிவிடும்! - கொரோனா குறித்து உலக சுகாதார நிறுவனம் கருத்து

இன்னும் இரண்டு வருடங்களில் சரியாகிவிடும்! - கொரோனா குறித்து உலக சுகாதார நிறுவனம் கருத்து - Daily news

கொரோனா பரவல் குறித்து ஒவ்வொரு நாளும் உலக சுகாதார நிறுவனத்தினர் பத்திரிகைகளில் உரையாடி வருகின்றனர். அப்படி நேற்று அவர்கள் பேசுகையில், இன்னும் 2 வருடத்திற்குள் கொரோனா தொற்றுக் காலம் முடிவுக்கு வரலாம் என்று தங்களின் கணிப்பை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா இன்று வரை உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டு இருக்கின்றது. மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டது மட்டுமின்றி, உலக நாடுகளின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ். இதற்கிடையே கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் அனைத்தும் மிகத்தீவிரமாக இயங்கி வருகின்றன.

தற்போது, உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியுள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 802,363 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 23,098,041 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 15,689,935 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 61,850 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், பல நாடுகள் கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனைக்கு வந்துள்ளன. கொரோனா பாதிப்புகள் உலகம் முழுவதும் கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது என்பதில் யாருக்குமே மாற்றுக்கருத்து இல்லை. இதன்காரணமாக கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பை உலக அவசரநிலை பேரிடராக என உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. கொரோனா தொற்றால் உடல்ரீதியான பாதுப்புகள் தொடங்கி மனம், மேலும் பொருளாதார ரீதியான பாதிப்புகளையும் பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர்.

உலக சுகாதார நிறுவனமும் கொரோனா குறித்தான தகவல்களை அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன. அப்படித்தான் நேற்றைய தினம் பேசும்போது, இரண்டு வருடத்திற்குள் கொரோனா முடிவுக்கு வரலாம் என தெரிவித்துள்ளது. 

இது குறித்து பேசியுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ், ``இரண்டு வருடத்திற்குள் கொரோனா முடிவுக்கு வரலாம் என நம்புகிறோம். 1918ம் ஆண்டு ஸ்பானிஷ் காய்ச்சல் வேகமாக பரவிய நிலையில் இரண்டு வருடத்திற்கு பிறகு முடிவுக்கு வந்தது. கொரோனாவை பொறுத்தவரையில், தொழில்நுட்ப உதவியுடன் கொரோனாவை நம்மால் வெற்றியடைய முடியும்" என்று தெரிவித்தார்.

கடந்த முறை இவர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது,``கொரோனா வைரஸின் முழுமையான செயல்பாடுகள் மற்றும் பரவும் விதம் ஆகியவை குறித்த தெளிவான புரிதல் இன்னும் ஏற்படவில்லை. இது ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. தொடக்கத்தில் வயதானவர்களே அதிகம் பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது இளைஞர்கள் மத்தியிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக 20, 30 மற்றும் 40 வயதுக்குட்பட்டவர்கள் மூலம் கொரோனா அதிக அளவில் பரவுகிறது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்படியிருக்கும்போது நேற்றைய தினம் அவரேவும் "மனிதர்களுக்கிடையேயான தொடர்புகள் அதிகரித்துள்ளதால், வைரஸ் பரவலுக்கான வாய்ப்பு நிறைய உள்ளது. அதே சூழ்நிலையில், நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கான தொழில்நுட்பமும், அறிவும் நம்மிடம் உள்ளது. தற்சமயத்தில் நமக்கு தேச ஒற்றுமையும், உலகளாவிய ஒற்றுமையும் மிகவும் அவசியமானது" என்று கூறியிருக்கிறார்.

கடந்த 1918ஆம் ஆண்டு ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃப்ளு பெருந்தொற்றால் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் ஐந்து கோடி மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் கிட்டத்தட்ட எட்டு லட்சம் பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2.27 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து மருத்துவ பாதுகாப்பு கவச உடை ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த டெட்ரோஸ், "பெருந்தொற்று காலத்தில் செய்யப்படும் இதுபோன்ற ஊழல்கள் என்னைப் பொறுத்தவரை, கொலைக்கு நிகரானது. ஏனெனில், சுகாதார பணியாளர்கள் பாதுகாப்பு கவச உடைகள் இல்லாமல் பணிபுரிவது அவர்களது உயிரையும், நோயாளிகளின் உயிரையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவதை போன்றது. எந்தவிதமான ஊழலையும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று மேலும் கூறினார்.

Leave a Comment