“காங்கிரஸ் கட்சி கடந்த 70 ஆண்டுகளாக நாட்டுக்காக உருவாக்கி வைத்த பல்வேறு கட்டமைப்புகளை, பாஜக கடந்த 7 ஆண்டுகளில் விற்றுவிட்டது” என்று, 
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மிக கடுமையாக விமர்சித்து உள்ளார்.

“நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் பிரதமர் மோடி விற்றுவிட்டதாகவும், கடந்த 70 ஆண்டுகளாக இந்தியா சேர்த்த வைத்த மொத்த சொத்துக்களை வேண்டப்பட்ட தொழில் அதிபர்களுக்குப் பிரதமர் மோடி பரிசாக அளிக்கிறார்” என்றும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த சில வாரங்களாக மிக கடுமையாக விமர்சித்து வருகிறார்.

அதன் படி, “இந்தியாவின் கிரீடத்தில் உள்ள வைரங்கள் போன்ற தொழில்களைத் தனியாருக்குப் பிரதமர் மோடி விற்கிறார் என்றும், தேசிய சொத்துக்களைப் பணமாக்கும் திட்டம் என்ற பெயரில் நாட்டின் சொத்துக்கள் விற்பனை செய்யப்படுகின்றன” என்றும், ராகுல் காந்தி, மிக கடுமையாக விமர்சித்து வந்தார்.

“மத்திய அரசின் திட்டத்தால் 3 அல்லது 4 நிறுவனங்கள் மட்டுமே பயன்பெறும் என்றும், இளைஞர்களுக்கான அரசு வேலை வாய்ப்பு என்பதையே மத்திய அரசு ஒழிக்கப் பார்க்கிறது” என்றும், மிக கடுமையாக ராகுல் காந்தி சாடி வந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான இந்தியத் தேசிய மாணவர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கலந்து கொண்டு பேசிய போது, “பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியின் போது, மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்தது என்றும், அந்த தாக்குதலுக்குப் பின் மன்மோகன் சிங்கை பலவீனமான பிரதமர் என்று ஊடகங்கள் கடுமையாக விமர்சித்தன” என்றும், குறிப்பிட்டார். 

“ஆனால், புல்வாமா தாக்குதல் நடந்த போது பிரதமர் மோடிக்கு எதிராக எந்த ஊடகமும் வாய் திறந்து பேச வில்லை” என்றும், தனது கவலையை அவர் வெளிப்படுத்தினார்.

அத்துடன், “காங்கிரஸ் கட்சி கடந்த 70 ஆண்டுகளாக நாட்டுக்காக பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது” என்றும், அவர் குறிப்பிட்டார். 

“இப்படியாக, கடந்த 70 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டதை, பாஜக கடந்த 7 ஆண்டுகளில் விற்றுவிட்டது” என்றும், மிக கடுமையாக ராகுல் சாடினார். 

மேலும், “பாஜக தலைமையிலான அரசின் செயல்பாடுகள் குறித்து ஊடகங்கள் ஏதும் கேள்வி கேட்காமல் மவுனமாக இருக்கின்றன” என்றும், ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார். 

“ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொடர்ந்து ஊடகங்கள் விமர்சித்தன என்றும், அதற்கு முரணாக ஊடகங்கள் இப்போது செயல்படுகின்றன” என்றும், ராகுல் காந்தி தனது கவலையை வெளிப்படுத்திப் பேசினார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.