“திருட்டில் ஈடுபட்ட போது என்னை தாங்கிய பொது மக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, கோரி பாதிக்கப்பட்ட திருடன் போலீசில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, பெங்களூருவைச் சேர்ந்த ரித்தேஷ் ஜெயக்குமார் என்ற 18 வயதான இளைஞன் ஒருவன், அந்த பகுதியில் சாலையில் நடந்து செல்லும் பெண்கள் மற்றும் பொது மக்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவர்கள் அணிந்திருக்கும் நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான் என்று, கூறப்படுகிறது.

இப்படியாக, எப்போதும் போல ரித்தேஷ் கடந்த 2 ஆம் தேதி பிரதீப் பாட்டீல் என்ற டாக்ஸி டிரைவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய நிலையில், அவர் வைத்திருந்த செல்போன் மற்றும் பர்ஸை பறிக்க முயன்று உள்ளார். 

அப்போது, பதிலுக்கு அந்த டாக்ஸி டிரைவரும் அவருடன் எதிர்த்து போராடியதால், ரித்தேஷின் திருட்டு முயற்சி படுதோல்வியில் முடிந்தது. 

அத்துடன், பாதிக்கப்பட்ட டாக்ஸி டிரைவர், திருடன் ரித்தேஷை தனது வாகனத்தை விட்டு வெளியே தள்ளி உள்ளார்.

மேலும், “திருடன் திருடன் என்று சத்தம் போட்டு கூச்சலிட்டதால், பொது மக்களின் அங்கு சூழ்ந்துகொண்டனர். இதனால், திருட வந்த ரித்தேஷை அந்த பகுதியாகச் சென்ற பொது மக்கள் சுற்றி வளைத்துள்ள நிலையில், அங்கிருந்து தப்ப முடியாமல் அவன் மிரண்டு போனான்.

குறிப்பாக, “அங்கு குவிந்த பொது மக்களின் பிடியில் இருந்து தப்பிக்கத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கிருந்த பொது மக்களை அந்த திருடன் தாக்கவும் முயன்று உள்ளான். 

அப்போது, அந்த வழியாகச் சென்ற சில இளைஞர்கள், திருடன் ரித்தேஷை மடக்கிப் பிடித்து தங்களது ஹெல்மெட்டை கொண்டு கடுமையாகத் தாக்கி உள்ளனர். 

அதே நேரத்தில், அங்கு குவிந்திருந்த பொது மக்களும், அந்த திருடனுக்கு தர்ம அடி கொடுத்து உள்ளனர்.

அதே நேரத்தில், அந்தப் பகுதியில் அதிகம் டிராபிக் ஆகி உள்ளது. இதனைப் பயன்படுத்திக்கொண்ட அந்த திருடன், அங்கிருந்து தப்பித்து ஓடி உள்ளான். 

பின்னர், பாதிக்கப்பட்ட டாக்ஸி ஓட்டுநர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அதிரடியாக ரித்தேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த நேரத்தில், “நான் திருட சென்ற இடத்தில் பொது மக்களில் சிலர் என்னை தாக்கினார்கள் என்றும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், பிடிபட்ட திருடன் போலீசாரிடம் புகார் அளித்திருக்கிறான். 

அந்த புகார் மனுவில், “4 மணி அளவில் அங்குள்ள ரிச்மாண்ட் டவுண் பகுதியில் காரில் அமர்ந்திருந்த ஒருவரைக் கத்தி முனையில் மிரட்டி செல்போன் மற்றும் பர்ஸை திருடினேன் என்றும், அப்போது அந்த நபர் உதவிக்கேட்டு ஆட்களை அழைத்துச் சத்தம்போட்டதால், அங்கு ஒரு 30 முதல் 40 பேர் வரை திரண்டு வந்து என்னை சூழ்ந்துகொண்டு கடுமையாகத் தாக்கினார்கள் என்றும், இந்த தாக்குதலில் எனக்கு தலை, உதடு, கை மற்றும் கால்களில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், “என்னைத் தாக்கிய பொது மக்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தினார். 

இதனால், வேறு வழியில்லாமல் திருடன் அளித்த புகாரை பெற்றுக்கொண்டு, “நடவடிக்க எடுப்பதாக” உறுதி அளித்தனர். 

இதன் காரணமாக, போலீஸில் ரித்தேஷ் கொடுத்த கம்ப்ளைட் தற்போது அந்த பகுதி பொது மக்கள் இடையே பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.