“மகாத்மா காந்தி இந்து ஆனால், கோட்சே இந்துத்வவாதியாக இருந்தார்” என்று, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

நாட்டில் கொரோனா பொது முடக்கத்திற்குப் பிறகு பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்திவாசிய பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. 

இதனால், மத்திய அரசு உடனடியாக தலையிட்ட விலை வாசியை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று, நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில் தான், “நாட்டின் விலைவாசி உயர்வு மற்றும் கொரோனா நிவாரணம் உள்ளிட்ட பிரச்சினைகளில் மத்திய அரசைக் கண்டித்து டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்த” தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் திட்டமிட்டது. 

ஆனால், டெல்லியில் இந்த போராட்டத்திற்கான அனுமதி முற்றிலுமாக மறுக்கப்பட்டது. 

இதனையடுத்து, இந்த போராட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு அதிரடியாக மாற்றி அமைக்கப்பட்டது.

அதன் படி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்றைய தினம் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக மாபெரும் பேரணி ஒன்றும் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்றது. 

அந்த பேரணியின் போது, “விலைவாசி உயர்வு, கொரோனா நிவாரணம் உள்ளிட்ட பிரச்சினைகளை” முன் வைத்து காங்கிரஸ் கட்சியானது, இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்ட பேரணியை நடத்தியது. 

அப்போது, இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது, இந்தக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “இந்திய அரசியலில் தற்போது இந்து மற்றும் இந்துத்துவவாதி என இரண்டு வார்த்தைகளுக்கு இடையே தன் பெரும் போட்டி நடைபெற்று வருவதாக” வெளிப்படையாகவே பேசினார். 

“இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன என்றும், பேசிய ராகுல் காந்தி, “நான் ஒரு இந்து. ஆனால், இந்துத்துவவாதி இல்லை” என்றும், வெளிப்படையாகவே அறிவித்தார்.

மிக முக்கியமாக, “மகாத்மா காந்தி இந்து. ஆனால், கோட்சே ஒரு இந்துத்துவவாதியாக இருந்தார்” என்றும், ராகுல் காந்தி அதிரடியாகப் பேசினார்.

ராகுல் காந்தியின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு, இணையத்தில் தற்போது பெரும் வைரலாகி வருகிறது.