மாணவி ஆஃப்ரின் பாத்திமா வீடு இடிப்புக்கு கடும் கண்டனங்கள் எழுந்து உள்ள நிலையில், “இஸ்லாமிய வெறுப்பின் உச்சமா?” என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி, மிக கடுமையாக பாஜகவை விமர்சனம் செய்து வருகின்றனர்.

பாஜகவைச் சேர்ந்த தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நுபுர் சர்மா, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கிடைத்தது பற்றி ஒரு டிவி விவாதத்தில் பங்கேற்று பேசிய போது, முகமது நபிகள் குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி, நபிகளை மிக கடுமையாக விமரச்னம் செய்திருந்திருந்தார். இதனைக் கண்டித்து, உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் இஸ்லாமிய அமைப்பினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டபோது, அங்கு இரு தரப்பினருக்கு இடையே கடும் மத மோதல் வெடித்தது. இதனால், அமைதிக்கு பெயர் போன இந்தியா, கலவர பூமியாக மாறிப்போனது. 

அப்போது, எரியும் தீயில் எண்ணையை ஊற்றும் விதமாக, பாஜகவின் டெல்லி நிர்வாகியான நவீன்குமார் ஜிந்தால், தனது டிவிட்டர் பக்கத்தில் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இதன் காரணமாகவும், இந்த விவகாரம் இன்னும் பூதாகரமாக வெடித்து கிளம்பியது. இதனையடுத்து, நுபுர் சர்மாவின் கருத்துக்கு இந்தியா முழுவதும் மிக கடும் கண்டனங்கள் எழத் தொடங்கிய நிலையில், பாஜவைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக தெரிவித்த கருத்திற்கு எதிராக ஒன்று திரண்ட உலகின் அனைத்து இஸ்லாமிய நாடுகளும், “இந்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று, ஒட்டுமொத்தமாக போர்கொடி தூக்கியதுடன், இந்தியாவிற்கு கடும் கண்டனமும் தெரிவித்தது. இது, இந்தியாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

அத்துடன், 57 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பான ஓஐசி, “இந்தியாவில் மதப் பிரச்சனை தொடர்பாக ஐநா தலையிட வேண்டும்” என்று, ஐநாவுக்கு கோரிக்கை வைத்தது. இதனால், கடும் அதிரச்சி அடைந்த இந்தியா, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அறிக்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில், உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நுபுர் ஷர்மாவின் பேச்சை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பபட்ட கலவரம் காரணமாக, பலர் கைது செய்யப்பட்டு நிலையில், இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகள் புல்டோசரில் இடிக்கப்படும் என்று, அந்த மாநில போலீசாரால் எச்சரிக்கப்பட்டு இருந்தது. 

எனினும், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய நுபுர் ஷர்மா இதுவரையில் போலீசாரால் கைது செய்யப்படாத நிலையில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகர் ரிதியுங்ஜய் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், புல்டோசரை கொண்டு வீடுகளை இடிக்கும் படத்தை பகிர்ந்து, “ஒவ்வொரு வெள்ளிக் கிழமைக்கும் அடுத்த நாள் சனிக்கிழமை வரும்” என்று, எச்சரித்து இருந்தார். 

அதன்படி, முஜம்மில் மற்றும் அப்துல் வகீர் ஆகியோரின் வீட்டிற்கு சென்று புல்டோசரை கொண்டு அவர்களது வீடுகளை இடித்து தள்ளி உள்ளனர். 

குறிப்பாக,டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க பிரதிநிதியும், மாணவர் செயற்பாட்டாளருமான ஆஃப்ரின் பாத்திமாவின் வீட்டையும் உத்தரப் பிரதேச அரசு, தற்போது இடித்து தரைமட்டமாக்கி உள்ளது. 

இவற்றுடன், வன்முறைக்கு காரணமானவர்கள் என்று கூறி ஆஃப்ரின் பாத்திமா, அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோரையும் உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்துள்ளதும், அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதனால், மாணவி ஆஃப்ரின் பாத்திமாவுக்கு ஆதரவாக #StandWithAfreenFathima என்ற, ஹேஷ்டேக்கையும் டிவிட்டரில் தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது. 

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “#StandWithAfreenFathima” என்ற ஹேஷ்டேக்கை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, அந்த மாணவிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

அத்துடன், “நுபுர்சர்மாவைக் கைது செய்யக்கோரி நடந்த போராட்டத்தில் அஃப்ரீன் ஃபாத்திமா முன்னின்று செயல்பட்டார் என, அவரது வீட்டை ஆக்கிரமிப்பு எனும் பெயரில் இடித்துத் தள்ளியுள்ளது ஃபாசிச பாஜக யோகி அரசு என்றும், இது இஸ்லாமிய வெறுப்பின் உச்சமான இந்த அநாகரிகத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்றும், அவர் கடுமையாக சாடி உள்ளார்.

மேலும், இந்த விவகாரம் பூதாகாரமாக தற்போது இந்தியாவில் வெடித்து கிளம்பி உள்ள நிலையில். ஜாவித் வீடு இடிக்கப்பட்டதற்கு அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கண்டனம் தெரிவித்து உள்ள அவர், “அஃப்ரின் பாத்திமா வீடு இடிப்பு சம்பவம், ஒட்டு மொத்த இஸ்லாமிய மதத்தினரையும் பாஜக தண்டிக்கிறது” என்று, ஓவைசி மிக கடுயைமாக விமர்சனம் செய்து உள்ளார்.

மிக முக்கியமாக, உத்தரப் பிரதேசத்தில் புல்டோசரால் வீடுகள் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதிக்கு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கடிதம் எழுதி உள்ளனர். 

அந்த கடித்தில், “பாஜகவுக்கு எதிராக போராடியவர்களின் வீடுகளை, உ.பி. அரசு புல்டோசர் மூலம் இடித்து வருவாக” அந்த கடிதத்தில் அவர்கள் அனைவரும் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளனர்.