மத்திய அமைச்சர் மகனால் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினருக்கு தலா 45 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரப் பிரதேச அரசு முன்வந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது, பாஜகவினர் நடத்திய வாகன அணிவகுப்பில் மத்திய அமைச்சரின் மகன், தனது காரை போராட்டக்காரர்கள் மீது ஏற்றி இறக்கியதால், சம்பவ இடத்தில் 4 பேரும், இதனையடுத்து அங்கு போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 4 பேர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையானது 9 ஆகே உயர்ந்து உள்ளது.

மேலும், இந்த போலீசாருடன் ஏற்பட்ட மோதலிலும், மத்திய அமைச்சரின் மகன் கார் ஏற்றி சென்றதிலும் பல விவசாயிகள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த சம்பவமானது, உத்தரப் பிரதேசத்தில் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், லகிம்பூர் கேரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான், வன்முறையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்திக்க பன்வீர்பூருக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேரில் சென்றார். இதனால், அவர் இன்று அதிகாலையில் தனது காரில் லக்னோவில் இருந்து பன்வீர்பூருக்கு சென்றார். அப்போது, பிரியங்கா காந்தி பன்வீர்பூர் கிராம எல்லையிலேயே போலீசாரால் அதிரடியாகத் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

அதே போல், உத்தரப் பிரதேசத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினரை சந்திக்க புறப்பட்ட அந்த மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவை போலீசார் தடுத்து நிறுத்தி அவரையும் கைது செய்து உள்ளனர். இதனால், போலீசாருக்கும் சமாஜ்வாதி கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கொந்தளித்து எழுந்துள்ளனர். பலரும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக, நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பாஜகவிற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவின் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் விவசாயிகள் போராட்டத்தில் ஒரே அணியாகத் திரண்டு உள்ளதால், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன், தற்போது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தான், “கார் ஏற்றிக்கொள்ளப்பட்ட 4 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா 45 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்” என்று,  உத்தரப் பிரதேச அரச அறிவித்து உள்ளது.

மேலும், “இந்த சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்கப்படும்” என்றும்,  உத்தரப் பிரதேச அரசு கூறியுள்ளது. 

அதே போல், இந்த சம்பத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், அந்த மாநில அரசு அறிவித்திருக்கிறது.

குறிப்பாக, “இந்த கலவரம் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை கமிட்டியும் உருவாக்கப்பட்டு உள்ளதாக” உத்தரப் பிரதேச அரசு கூறியுள்ளது.