சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட் கார்டன் சாலையை சேர்ந்த 2 சிறுவர்கள் சில தினம் முன்பு, தொழுகைக்காக சைக்கிளில் ஜோசியர் தெருவிற்கு சென்றுள்ளனர். பின்னர், தொழுகையை முடித்துவிட்டு உத்தமர் சாலை வழியாக வரும்போது, நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், சிறுவர்களை இடித்து கீழே தள்ளியுள்ளார். 


இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த சிறுவர்களை அந்த மர்ம நபர் அடித்து தாக்கியுள்ளார். மேலும் அந்த சிறுவர்களிடமிருந்த தங்க நகை, வாட்ச், செல்போன் ஆகியவற்றை தருமாறு மிரட்டியுள்ளார். இதை கண்ட பொதுமக்கள் சத்தம் போட்டு உள்ளனர். அவர்கள் வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பியோட்டி விட்டார்.


இதன்பின், அந்த சிறுவர்கள்  சகோதரனிடம் நடந்ததை கூறியுள்ளனர். உடனே சகோதரர், காரில் சிறுவர்களை அழைத்துக் கொண்டு கொள்ளையனை தேடியுள்ளனர். அப்போது கொள்ளையன், தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவமனை அருகே நின்றிருப்பதை கண்டு, அவனை துரத்திச் சென்றபோது இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது அவனை விரட்டிச் சென்ற சகோதரர், ஆயிரம்விளக்கு மசூதி அருகே இருசக்கர வாகனத்தை மோதியதில் அந்த நபர் கீழே விழுந்துள்ளார். உடனே இருசக்கர வாகனத்தை அங்கே விட்டு தப்பியோடி உள்ளார்.


பின்னர் ஆயிரம் விளக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரகாஷிடம் நடந்ததை சிறுவர்கள் கூறியுள்ளனர். சிறுது நேரம் கழித்து விட்டு சென்ற வாகனத்தை எடுக்க வந்த அந்த நபரை காவல்துறையினர் பிடிக்க முயன்றபோது, அனைவரையும் தள்ளி விட்டு மீண்டும் தப்பி ஓடியுள்ளார்.

உடனே உதவி ஆய்வாளர் பிரகாஷ் , சுமார் 1 கிமீ தூரம் வரை துரத்தி சென்று மடக்கிப் பிடித்துள்ளார்.
அதன்பிறகு, நடத்திய விசாரணையில் தொடர் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளி அஜித் (எ) முனுசாமி தான் அந்த நபர் என்று தெரியவந்ததுள்ளது. மேலும், நுங்கம்பாக்கத்தில் அந்த சிறுவர்களிடம் வழிபறி செய்யும் முன்பு திருவல்லிக்கேணி மற்றும் பூக்கடை பகுதிகளிலும் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்ததுள்ளது.


இதனையடுத்து அஜித் வைத்திருந்த நகைகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சினிமா பாணியில் கொள்ளையனை ஒரு கிலோ மீட்டர் துரத்திப் பிடித்து கைது செய்த உதவி ஆய்வாளர் பிரகாஷூக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.