சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தூங்கிக்கொண்டு இருந்தவர் மீது கல்லை தூக்கி போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னை ரயில் நிலையத்தில் சுமை தூக்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக ஆள் நடமாட்டம் நிறைந்த பரபரப்பான இடத்தில் தூங்கிக் கொண்டு இருந்த சுமை தூக்கும் தொழிலாளி மீது கல்லை போட்டுக் கொலை செய்த காட்சிகள் பதற வைத்துள்ளது.


சுமை தூக்கும் தொழிலாளி ராஜாவுக்கும், குமாருக்கும், இடையே சுமை தூக்குவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜா மீது குமார் கடும் கோபத்தில் இருந்துவந்துள்ளார். இந்நிலையில் எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆள் அதிகம் நடமாடிக்கொண்டு இருந்த இடத்தில் மது போதையில் ராஜா தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். 


சிசிடிவியில் பதிவான காட்சியில் எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் ஒரு பெரிய கல்லை எடுத்து வருகிறார் குமார். அந்த கல்லை தூங்கிக்கொண்டு இருந்த ராஜா மீது போட்டுவிட்டு, உடனே தப்பி சென்றுவிட்டார்.


தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, ரத்த வெள்ளத்தில் இருந்த ராஜாவை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜா இறந்துவிட்டார். தப்பிசென்ற குமாரை காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.