இந்தியாவில் கோவிட் - 19 கொரோனாவால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து, மத்திய அமைச்சகம்  பத்திரிகையாளர்களிடையே பேசியுள்ளது. அதில், மத்திய சுகாதாரத்துறையின் சிறப்பு அலுவலர் ராஜேஷ் புஷன், ``137 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், இதுவரை 7.7 லட்சம் பேருக்குத்தான் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதிலிருந்தே, இந்தியா எவ்வளவு நன்றாக கொரோனாவை கையாள்கிறது என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு மில்லினுக்கு, எத்தனை பேர் உலகளவில் பாதிக்க்கப்பட்டிருக்கிறார் என்பதை, உலகின் பிற நாடுகளிலும், இந்தியாவிலும் ஒப்பிட்டு பார்த்தால், இந்தியா மிகவும் குறைவாகவே பாதிக்கப்பட்டுள்ளது" எனக்கூறியிருக்கிறார்.

உலக சுகாதார நிறுவனத்தின் ரிப்போர்ட்டின்படி, இந்தியாவில் ஒரு மில்லினுக்கு, 538 பேர் பாதிக்க்கப்பட்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையானது, உலகின் பிற நாடுகளில் 16 முதல் 17 மடங்கு அதிகமாக இருக்கிறது என்பதை, பிற நாடுகளுக்கான ரிப்போர்ட் வழியாக நம்மால் தெரிந்துக் கொள்ள முடிகிறது. இதை அடிப்படையாக வைத்தே, மத்திய அமைச்சகத்தினர் பேசியுள்ளனர்.

ராஜேஷ் புஷன், தனது பேட்டியில், கவனிக்கத்தக்க மற்றொரு தகவலையும் கூறியிருக்கிறார். அது, ``இந்தியாவில், ஒரு மில்லியன் கொரோனா நோயாளிகளில் 15 பேர் மட்டுமே இறக்கின்றார்கள். ஒருசில நாங்களில், இதே எண்ணிக்கை 40 மடங்கு அதிகமாக இருக்கும் நிலையெல்லாம் இருக்கிறது" என்பது. 

இந்தியாவின் இறப்புகள் குறித்து பார்க்கும்போது, இங்கு கொரோனாவால் இறப்பவர்களில் 53 % பேர், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதே எண்ணிக்கை 45 - 59 வரையிலானோருக்கு 32 % என்றும், 60 முதல் 74 வயதினோருக்கு 39 % என்றும்,  30 முதல் 44 வயதினருக்கு 11 % என்றும் உள்ளது. அதேபோல, 14 வயதுக்கு குறைவான இறப்பு 1 %. 15 முதல் 29 வயதுக்குட்பட்டோரின் இறப்புகள் 3 %தான்.

இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்து பார்க்கும்போது, இந்தியாவில் சமூக பரவல் ஏற்படவில்லை என அழுத்தமாக கூறுகிறார் ராஜேஷ் பூஷன். ``சமூக பரவலென்றால் என்ன எனும் விளக்கங்களை உலக சுகாதார நிறுவனம் இதுவரை தரவில்லை. நிலையை பொறுத்து, சம்பந்தப்பட்ட நாட்டை சேர்ந்த அதிகாரிகள்தான் நிலைமையை முடிவு செய்ய வேண்டும். ஆகவே இந்திய சுகாதாரத்துறை சார்பாக நாங்கள் கள ஆய்வு செய்து, இங்கு இன்னும் சமூக பரவல் ஏற்படவில்லை என்பதை உங்களுக்கு அறிவிக்கிறோம்" எனக்கூறியிருக்கிறார்.

இப்போதைக்கு இந்தியாவில் 2.69 லட்சம் பேர்தான், கொரோனாவுக்கான சிகிச்சையில் இருக்கிறார்கள். மற்றவர்கள், நலமுடன் வீடு திரும்பிவிட்டார்கள். அந்தவகையில், பாதிக்கப்பட்டோரை விட இங்கு குணப்படுத்தப்பட்டோர் அதிகம் என்ற அடிப்படையில் இங்கு சூழல் கட்டுக்குள் இருக்கிறது எனக்கூறியிருக்கிறார் ராஜேஷ். 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ஐ.சி.எம்.ஆர்) மூத்த விஞ்ஞானி நிவேதிதா குப்தா, ``இந்தியா ஒவ்வொரு நாளும் பரிசோதனைகளை அதிகப்படுத்திக் கொண்டே வருவது, மிகவும் ஆரோக்கியமான விஷயம். ஒரு நாளுக்கு 2.6 லட்சம் சோதனைகள் செய்யப்படுகின்றன. இவற்றோடு சேர்த்து ஆன்டிஜென் டெஸ்ட் எடுக்கும் முயற்சியிலும் நாங்கள் ஈடுபடு வருகிறோம்" எனக்கூறியிருக்கிறார்.

ஐ.சி.எம்.ஆர் மேற்கொண்டு இந்திய மக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை மதிப்பிடுவதற்காக மக்கள் தொகை அடிப்படையிலான செரோ கணக்கெடுப்பை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. தடுப்பு மருந்துப் பணிகளில், இந்தியாவில் இப்போதைக்கு பாரத் பயோடெக் மற்றும் காட்லியா ஆகிய நிறுவனங்கள் பணியில் ஈடுபட்டிருக்கின்றனவாம். ``இந்த.இரு நிறுவனங்களின் மருந்துகளும், முதல் இரு நிலை பரிசோதனைகளை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது" என கூறியிருக்கிறது மத்திய அமைச்சகம்.

பிரதமர் நரேந்திர மோடி, `கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு பணியிலும், மருந்து தயாரித்து விற்பதிலும் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கப்போகிறது" எனக்கூறியிருந்தது, இங்கே குறிப்பிடத்தக்கது.

 

- ஜெ.நிவேதா